விதான சவுதாவை முற்றுகையிட முயற்சி; மாணவ அமைப்பினர் மீது தடியடி
கர்நாடக திறந்தவெளி பல்கலைக்கழகத்தை மூட எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட முயன்ற மாணவ அமைப்பினர் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
பெங்களூரு,
கர்நாடக மாநில திறந்தவெளி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெங்களூரு சுதந்திர பூங்காவில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பை சேர்ந்த மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
பின்னர் திறந்தவெளி பல்கலைக்கழகத்தை மூட திட்டமிட்டுள்ள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசின் முடிவை கைவிடக் கோரியும் விதானசவுதாவை முற்றுகையிட மாணவர் அமைப்பினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றார்கள். அவர்களை சி.ஐ.டி. போலீஸ் அலுவலகம் முன்பாக வைத்து தடுப்பு வேலி அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
போலீஸ் தடியடி
இதனால் போலீசாருடன் மாணவர் அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடுப்பு வேலி மீது ஏறி குதித்து மாணவர் அமைப்பினர் விதானசவுதாவை முற்றுகையிட முயன்றார்கள். இதன் காரணமாக அங்கு தள்ளுமுள்ளு உண்டானது. இதையடுத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் சிலர் காயம் அடைந்தார்கள். பின்னர் விதானசவுதாவை முற்றுகையிட முயன்ற மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்து அங்கிருந்து அழைத்து சென்றார்கள்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவி மயக்கம் போட்டு கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
Related Tags :
Next Story