சாலை குழியில் ஓவியர் உருவாக்கிய நீச்சல் குளம்; நடிகை சோனுகவுடா விளையாடினார்


சாலை குழியில் ஓவியர் உருவாக்கிய நீச்சல் குளம்; நடிகை சோனுகவுடா விளையாடினார்
x
தினத்தந்தி 14 Oct 2017 4:30 AM IST (Updated: 14 Oct 2017 4:03 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு சாலை குழியில் ஓவியர் உருவாக்கிய நீச்சல் குளத்தில் நடிகை சோனுகவுடா நீரில் விளையாடினார்.

பெங்களூரு,

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதால் பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக தொடர்ச்சியாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. சில நாட்களில் பகலிலும் மழை வெளுத்து வாங்குகிறது. நகரில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக கூறுகிறார்கள். மழைக்காக ஏங்கி தவித்த மக்கள், இப்போது மழை போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பெங்களூருவில் சாலைகள் எல்லாம் சிதைந்துபோய் உள்ளன. நகரில் உள்ள சாலைகளில் மட்டும் 16 ஆயிரம் குழிகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த குழிகளால் வாகனங்கள் மாட்டு வண்டியை போல் ஆடி அசைந்து செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நரக வேதனையை அனுபவித்து வருகிறார்கள். விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது. குழிகளால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி சிலர் உயிரையும் இழந்துவிட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் கீழே விழுந்து காயம் அடைந்து உள்ளனர்.

நீச்சல் குளத்தை உருவாக்கினார்

இந்த நிலையில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளை மூடக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்க ஒரு ஓவியர் நூதன முயற்சியில் ஈடுபட்டார். அதாவது ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி என்பவர், நேற்று பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் உள்ள ஒரு குழியில் தனது ஓவியம் மூலம் நீச்சல் குளத்தை உருவாக்கினார்.

அதில் நடிகை சோனுகவுடா என்பவர் கடல்கன்னி உடை அணிந்து உட்கார்ந்து குதூகலமாக குளித்து விளையாடும் காட்சியும் இடம் பிடித்தது. இது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.

கடமையை செய்தேன்

இதுகுறித்து நடிகை சோனுகவுடா கூறுகையில், “எனக்கு எப்போதும் இந்த சமூகம் மீது அக்கறை உண்டு. மழையால் சாலைகளில் அதிக குழிகள் ஏற்பட்டுள்ளன. இந்த குழிகளால் ஏற்பட்ட விபத்துகளில் பொதுமக்கள் 6 பேர் மரணம் அடைந்துள்ள செய்தி என்னை வேதனை அடைய செய்தது. ஓவியர் பாதல் நஞ்சுண்டசாமி இந்த குழிகளை மூடக்கோரி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த ஓவியத்தை வரைய உள்ளதாகவும், அதற்கு உதவுமாறும் என்னிடம் கேட்டார். அதனால் நகரின் குடிமகளாக நான் இந்த கடமையை செய்தேன்“ என்றார்.

இந்த பாதல் நஞ்சுண்டசாமி, கடந்த காலங்களில் இதேபோல் நகரில் உள்ள சாலைகளில் குழிகள் ஏற்பட்டபோது ஓவியம் மூலம் நீச்சல் குளத்தை உருவாக்கி அரசின் கவனத்தையும், மக்களின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Next Story