வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தையை கடத்திய வாலிபர் கைது


வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆண் குழந்தையை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Oct 2017 4:22 AM IST (Updated: 14 Oct 2017 4:22 AM IST)
t-max-icont-min-icon

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு வயது ஆண் குழந்தையை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை, 

மும்பை பரேலை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு தூங்கிக்கொண்டிருந்த தனது குழந்தையை படுக்க வைத்துவிட்டு அந்த பெண் அருகில் உள்ள கடைக்கு சென்றிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்தில் திரும்பி வந்த போது குழந்தையை காணவில்லை.

இதனால் பதறிப்போன அந்த பெண் அக்கம்பக்கத்தில் தேடி அலைந்தார். ஆனால் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அவர் போய்வாடா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

சிவ்ரியில் மீட்பு

மேலும் இது குறித்து மற்ற போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில், மறுநாள் மதியம் சிவ்ரி பகுதியில் வாலிபர் ஒருவர் கையில் ஆண் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனே போலீசார் அங்கு சென்று குழந்தையுடன் நின்ற வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கையில் வைத்திருந்த ஆண் குழந்தை பரேலில் காணாமல் போனதாக புகார் தெரிவிக்கப்பட்டவரின் குழந்தை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த குழந்தையை மீட்டனர்.

வாலிபர் கைது

மேலும் அந்த வாலிபரை அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில் அவர் சிவ்ரியை சேர்ந்த ராஜா தர்மாசாலா (வயது24) என்பது தெரியவந்தது.

தனியாக வசித்து வருவதால் குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டு அந்த ஆண் குழந்தையை கடத்தி வந்ததாகவும், வேறு எந்த கெட்ட எண்ணத்திலும் குழந்தையை கடத்தவில்லை என்றும் போலீசாரிடம் அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

Next Story