திருவண்ணாமலையில் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் பணி வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலையில் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் பணி வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2017 11:30 AM IST (Updated: 14 Oct 2017 10:55 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் பணியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கோபால பிள்ளையார் தெரு, வாழைத்தோட்ட தெரு, வடஅய்யங்குள அக்ரஹார தெரு, அய்யங்குள தெரு, ராமலிங்கனார் பிரதான சாலை, காந்தி நகர் பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் பணிகள் நேற்று காலை நகராட்சி சார்பில் நடைபெற்றது.

இந்த பணியில் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு ஒவ்வொரு வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், வீடுகள் மற்றும் தெருக்களில் பயன்படுத்தப்படாத பொருட்களில் தேங்கி இருந்த தண்ணீரை அகற்றி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கப்பட்டது.
இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

தமிழக முதல்- அமைச்சர் உத்தரவின்பேரில் அனைத்து பகுதிகளில் பல்வேறு காய்ச்சல்களை கட்டுப்படுத்துதல் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 15 நாட்களுக்கு அனைத்து பகுதிகளிலும் குறிப்பாக நகர்புற பகுதிகளில், டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ள நீர்தேங்கும் இடங்கள், குப்பை கூளங்கள், கட்டுமான பகுதிகள் ஆகியவற்றை முழுமையாக துப்புரவுப்படுத்தும் பணி நடைபெற உள்ளது.

ஆய்வின் போது சுத்தம் செய்யப்படாத இடங்கள், டெங்கு நோயினை உருவாக்கும் கொசுக்கள் மற்றும் புழுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப்பட்டால் 1939-ம் ஆண்டு பொது சுகாதார திட்டத்தின்கீழ் அந்த இடத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் பாரிஜாதம், நகரநல அலுவலர் வினோத், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story