தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் பனிப் பாறைகள்!


தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் பனிப் பாறைகள்!
x
தினத்தந்தி 14 Oct 2017 2:11 PM IST (Updated: 14 Oct 2017 2:11 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவின் லடாக் பகுதியில் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க பனிப்பாறைகளைப் பயன்படுத்திக்கொள்ளும் புதுமைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இமயமலையின் மேலே, இந்தியாவின் வடக்கில் உள்ள, லடாக் பகுதியில் தண்ணீர்ப் பிரச்சினைக்குத் தீர்வும் காணும் இத்திட்டத்தை 10 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ளனர்.

அங்கு சில பெரிய கட்டிடங்களின் மேல் சுமார் 30 அடி உயரமான பனிப்பாறைகள் வைக்கப்பட்டுள்ளன. வசந்தகாலத்தின் ஆரம்ப கட்டத்தில் அவை உருகி, அங்குள்ள கிராம மக்களுக்குத் தண்ணீர் அளிக்கும் என்று தன்னார்வலர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பனி வடிவங்கள், சோனம் வாங்சுக் என்பவரின் யோசனையில் உருவானவை. லடாக்கிலேயே பிறந்த இவர், உள்ளூர் மக்களின் அன்றாடப் பிரச்சினையைச் சரிசெய்ய பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.
“நாங்கள், நியூயார்க்கிலும், புதுடெல்லியிலும் கிடைக்கும் தீர்வுகளை பெறுகிறோம். ஆனால் அவை இந்த பெரிய மலைப் பகுதியில் பலன் கொடுக்காது. மலைப்பகுதி மக்கள், தங்களுக்கான தீர்வை தாங்களேதான் கண்டறிய வேண்டும்” என்கிறார் வாங்சுக்.

இவரது யோசனையின்படி, புவியீர்ப்பு விசையால் மேலெழும்பும் நீர், பனியாக மாற்றப்பட்டு சேமிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் வாங்சுக், அதே பகுதியில் வசிக்கும் செவிங் நோர்பல் என்பவரின் பணியால் கவரப்பட்டுள்ளார். நோர்பல், தட்டையான செயற்கை பனிப்பாறைகளை நான்கு ஆயிரம் அடி மீட்டர் உயரத்துக்கு மேலே உருவாக்கினார். ஆனால், அவ்வளவு உயரத்துக்குச் சென்று தண்ணீர் கொண்டுவர மக்கள் தயக்கம் காட்டினர்.

ஒரு பாலத்தைக் கடந்துகொண்டு இருந்தபோது, தனக்கு இந்த பனிப்பாறைகள் குறித்த யோசனை தோன்றியதாகக் கூறுகிறார் வாங்சுக். “நான் பார்த்தபோது, அந்தப் பாலத்துக்குக் கீழே மூவா யிரம் மீட்டரில் பனி இருந்தது. அதுவே, அந்தப் பகுதியில் மிகவும் தாழ்வான, கதகதப்பான பகுதியாகும்” என நினைவுகூர்கிறார்.

“மே மாதத்தில் நேரடியாக சூரிய ஒளி பட்டால் இந்தப் பாறைகள் உருகிவிடும். ஆனால், இதன்மீது சூரிய ஒளி படாமல் பாதுகாத்தால், இங்கு பனியைச் சேமிக்கலாம் என நான் யோசித்தேன்” என்கிறார்.

அதனால், கடந்த 2013-ம் ஆண்டு, அவரும் செக்மோல் அல்டர்நேட்டிவ் பள்ளியில் உள்ள அவரின் மாணவர்களும் இணைந்து, பனி உருவங்களை பியாங் நகரில் உருவாக்கத் துவங்கினர்.

அவர்கள் இதை, ‘ஸ்தூபங்கள்’ என அழைக்கின்றனர். காரணம், அவை பார்ப்பதற்கு திபேத்தின் மத ஸ்தூபங்கள் போல, புத்த பீடம் போன்ற வடிவில் உள்ளன.

மிகவும் எளிதான கோட்பாட்டில் இவை இயங்குகின்றன. பனிகள் உருவாகும் இடத்தின் கீழே நிலத்துக்குள் குழாய் செலுத்தப்படுகிறது. அதன் கடைசிப் பகுதி பூமிக்கு வெளியே செங்குத்தாக நிற்கிறது.

லடாக்கின் வித்தியாசமான உயரங்கள், தட்பவெப்பம் மற்றும் புவியீர்ப்பு விசையால், தண்ணீர் மேல் எழும்புகிறது. குழாய் மூலம் வெளியேறிவரும் தண்ணீர், நீரூற்றுப் போல மாறுகிறது.

பூஜ்ஜியத்துக்குக் கீழே வெப்பநிலை குறையும்போது, அவை உறைந்து, முக்கோணம் போல காட்சியளிக்கின்றன.

“நாங்கள் பனிக்காலத்தில் பயன்படுத்தப் படாத தண்ணீரை உறைய வைக்கிறோம். இங்கு நிலவும் சூழல், வசந்த காலத்தின் இறதி நாட்கள் வரை அவற்றை உருகாமல் பார்த்துகொள்கின்றன” என்கிறார் வாங்சுக்.
வசந்த கால இறுதியில், இந்த பாறை வடிவங்கள் உருகும் போது, குடிநீருக்கும், பயிர்களின் சொட்டு நீர் பாசனத்துக்கும் பயன்படுத்தலாம்.

இந்த பனி உருவங்கள், புத்த மத ஸ்தூபங்கள் போல உள்ளதாலும் அங்குள்ள மக்களை இவை கவர்ந்துள்ளன.

2014-ம் ஆண்டு, பியாங்கில் வெற்றிகரமாகத் தங்களின் பனி உருவத்தை உருவாக்கியதற்குப் பிறகு, அங்குள்ள புத்த துறவிகள், இந்தக் குழுவினரிடம் இதுபோன்ற 20 ஸ்தூபங்களை உருவாக்கித்தரும்படி கேட்டுள்ளனர்.
இங்கு மட்டுமல்ல, வெளிநாட்டுக்கும் வாங்சுக் குழுவின் புகழ் பரவிவிட்டது. சுவிட்சர்லாந்து மலைகளில் வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளைக் காக்க இந்த உத்தியை சுவிஸ் அரசு பயன் படுத்த முனைகிறது. அதற்காக வாங்சுக் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Next Story