டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் வீடு வீடாக ஆய்வு


டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் வீடு வீடாக ஆய்வு
x
தினத்தந்தி 14 Oct 2017 2:23 PM IST (Updated: 14 Oct 2017 2:22 PM IST)
t-max-icont-min-icon

மண்டபம் யூனியன் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர்.

பனைக்குளம்,

மண்டபம் யூனியன் பகுதியில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். இதில் விதிமுறை மீறியவர்களுக்கு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் நடராஜன் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன்படி மாவட்ட சுகாதார துறையினர் அனைத்து பகுதிகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மண்டபம் யூனியன் பனைக்குளம் பகுதியில் நேற்று காலை மாவட்ட திட்ட இயக்குனர் தனபதி, சுகாதார துறை துணை இயக்குனர் குமரகுருபரன், மாவட்ட மலேரியா அலுவலர் உதயக்குமார், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராஜா, வட்டார சுகாதார ஆய்வாளர் மகேந்திரன், புதுவலசை சுகாதார ஆய்வாளர் கேசவன் மற்றும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர்.

அப்போது 20-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்து விதிமுறை மீறி கழிவுநீர் சாலையில் விடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு விதிமுறை மீறியதாக எச்சரிக்கை நோட்டீசு வழங்கினர்.

அதனை தொடர்ந்து பனைக்குளம் கிழக்கு பகுதியில் பழைய மீன்கடை தெருவில் ஆய்வுயிட்டபோது அங்கும் ஏராளமான வீடுகளில் இருந்து கழிவுநீர் சாலைகள் விடப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். அவற்றில் கொசுக்கள் உற்பத்தியாகி இருப்பதை கண்ட அதிகாரிகள் வீட்டின் உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்ததுடன் இதனால் ஏற்படும் சுகாதரக்கேடுகள் குறித்து விளக்கி கூறினர். பின்பு ரேஷன்கடை பகுதியில் குவிக்கப்பட்டிருந்த டயர்களை உடனடியாக அப்புறப்படுத்த உத்தரவிட்ட அதிகாரிகள், சாலையோரங்களில் குப்பைகள் கொட்டுவது, பாலிதீன் பைகள் போடுவதை தவிர்க்கவேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். அப்போது சாலையில் கழிவுநீரை விடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஊராட்சி செயலர் ரோகிணிக்கு உத்தரவிட்டனர். பின்னர் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு நடத்தி கழிவுநீர் தேங்கியுள்ள இடங்களில் வட்டார சுகாதார ஆய்வாளர் மகேந்திரன், புதுவலசை ஆய்வாளர் கேசவன் ஆகியோரது மேற்பார்வையில் கொசு மருந்து புகை அடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர் குமரகுருபரன் ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் நடராஜன் ஆலோசனையின்பேரில் சுகாதார துறை சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பேரூராட்சி செயல் அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு இதுதொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. ஊராட்சியில் குப்பைகள் தேங்காமல் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும், குடிநீர் கிணறுகள், குடிநீர் தொட்டிகளை சுத்தமாக பராமரித்து குளோரின் பவுடர் கலந்து பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கவும் அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

மண்டபம் யூனியனை பொறுத்தவரை மர்ம காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பனைக்குளம் பகுதியில் பல இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் வாய்ப்பு உள்ளது.

அந்த வீடுகளில் குழாய்கள் அகற்றப்பட்டு எச்சரிக்கை நோட்டீசு வழங்கப்பட்டுஉள்ளது. இனிவரும் காலங்களில் அவர்கள் கழிவுநீரை வீதிகளில் விடாமல் தொட்டிகளில் சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உடனுக்குடன் உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது. ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள டெங்கு நோயாளிகள் குறித்தும் சுகாதார துறையினர் மூலம் நேரடியாக ஆய்வு நடத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவர்கள் இருந்தால் அவர்கள் நேரடியாக அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உரிய சிகிச்சை பெற போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் அதிகஅளவில் சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கிணற்றில் மருந்து தெளிக்கவும், மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் மூலம் கிராமம் கிராமமாக சென்று இந்த ஆய்வு பணி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story