திருச்செந்தூர் கடலில் இறந்து மிதந்த ராட்சத திமிங்கலம்


திருச்செந்தூர் கடலில் இறந்து மிதந்த ராட்சத திமிங்கலம்
x
தினத்தந்தி 15 Oct 2017 4:15 AM IST (Updated: 14 Oct 2017 11:27 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கடலில் ராட்சத திமிங்கலம் இறந்து மிதந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் ஜீவா நகருக்கும், வீரபாண்டியன்பட்டினத்துக்கும் இடையில் கடற்கரையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கடலில் சுமார் 20 அடி நீளமுள்ள ராட்சத திமிங்கலம் இறந்து மிதந்தது. நேற்று காலையில் படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை பார்த்து, ஆலந்தலை கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கோபி தலைமையிலான போலீசார் படகில் விரைந்து சென்று, இறந்த திமிங்கலத்தை பார்வையிட்டனர்.

அப்போது திமிங்கலத்தின் முதுகு பகுதியில் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. எனவே ஆழ்கடலில் கப்பல் மோதியதில் திமிங்கலம் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மன்னார்குடா உயிர்க்கோள காப்பக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அந்த திமிங்கலம் இறந்து பல நாட்கள் ஆனதால் அழுகிய நிலையில் மிகவும் துர்நாற்றம் வீசியது. அது கடல் நீரோட்டத்தில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டவாறு இருந்தது. இதனால் அதனை கடற்கரைக்கு இழுத்து வர முடியவில்லை. திருச்செந்தூர் கடலில் ராட்சத திமிங்கலம் இறந்து மிதந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story