9 வயது மகள் கண்முன்னே மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


9 வயது மகள் கண்முன்னே மனைவியை கழுத்தை நெரித்துக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 15 Oct 2017 3:45 AM IST (Updated: 15 Oct 2017 1:37 AM IST)
t-max-icont-min-icon

9 வயது மகள் கண்முன்னே, மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

கோவை,

கோவை குனியமுத்தூர் திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் வாசிம் (வயது 34). இவருடைய மனைவி ஜோகர்மா (27). இவர்களுக்கு அஜிமா (9) என்ற மகளும், 6 வயதில் ஒரு மகனும் உள்ளனர். வாசிம் கோவை டவுன்ஹாலில் உள்ள ஒரு கைக்கெடிகாரம் பழுது நீக்கும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் அடிக்கடி மதுகுடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 20.7.2015 அன்று இரவு 9 மணியளவில் வாசிம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அந்த சத்தத்தில் மூத்த மகள் அஜிமா கண்விழித்துக் கொண்டாள். அந்த நேரத்தில் ஆத்திரம் அடைந்த வாசிம் மனைவி ஜோகர்மாவின் கழுத்தை நெரித்து கொன்றார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஜிமா பயத்தில் சத்தம் போட்டாள். உடனே வாசிம் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். அவர் சில நாட்கள் கழித்து தாராபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

9 வயது மகள் சாட்சியம்

இது குறித்து கோவை குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு, கோவை வெடிகுண்டு வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் 16 சாட்சிகள் சேர்க்கப்பட்டன. இதில் கொலை செய்யப்பட்ட ஜோகர்மாவின் மகள் அஜிமா நேரில் பார்த்த சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தாள். சிறுமி அஜிமா தனது தாயை தந்தை தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தாள்.

தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் நேற்று தீர்ப்பு கூறினார். மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற தொழிலாளி வாசிமிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி குணசேகரன் தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் கோபாலகிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். 

Related Tags :
Next Story