மரக்கடையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்


மரக்கடையில் பயங்கர தீ விபத்து பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் மரக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசமானது.

தஞ்சாவூர்,

தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் மரக்கடை உள்ளது. இந்த கடையில் வீடு கட்டுவதற்கு தேவையான தேக்கு மரக்கட்டைகள், பிளாஸ்டிக் பைப்புகள், டைல்ஸ், கடப்பாக்கல், ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு உரிமையாளரும், ஊழியர்களும் வீட்டிற்கு சென்றனர். நேற்றுஅதிகாலை 4 மணிக்கு இந்த கடையில் திடீரென தீப்பிடித்தது.

தீ மளமளவென பரவியதால் மரக்கட்டைகள் கொழுந்துவிட்டு எரிந்தன. கடைக்குள் இருந்து கரும்புகை வருவதை பார்த்த காவலாளி உடனே கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அக்கம் பக்கத்தினர் தஞ்சை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி கோபால்சாமி தலைமையில் 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

2 வண்டிகளிலும் தண்ணீர் காலியானதால் தனியாருக்கு சொந்தமான 2 லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்பு வண்டிகளில் நிரப்பப்பட்டு தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணிநேரம் போராடி தீ அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் முழுமையாக எரிந்து நாசமானது. சேத மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என தெரிகிறது.

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தஞ்சை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story