பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீரை வழங்க வேண்டும் நகராட்சி நிர்வாக ஆணையாளர் உத்தரவு
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நகராட்சிகளிலும் பொதுமக்களுக்கு குளோரின் கலந்த குடிநீர் வழங்க வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் உத்தரவிட்டு உள்ளார்.
தாம்பரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு மற்றும் வேலூர் மண்டலங்களை சேர்ந்த 37 நகராட்சிகளின் பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தமிழக நகராட்சி நிர்வாக ஆணையாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நகராட்சிகளிலும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நல்ல தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தி ஆவதால் குடிநீர் குழாய்களில் கசிவு ஏற்படுவதை கண்காணித்து அதை தடுக்க வேண்டும்.
குளோரின் கலந்த குடிநீர்
பள்ளம் தோண்டி தொட்டி அமைத்து குடிநீர் பிடிக்க கூடாது. அந்த தொட்டிகளை மூடி கைப்பம்புகள் அமைக்க வேண்டும். அனைத்து நகராட்சிகளிலும் தண்ணீர் வினியோகத்துக்காக குடிநீரேற்றம் செய்யும் போதே அதில் குளோரின் கலந்து விடவேண்டும்.
குடிநீர் மேல் நிலைத்தொட்டிகள் அனைத்திலும் குளோரின் கலந்த பிறகே பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். குளோரின் கலக்காமல் குடிநீர் வழங்குபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் செங்கல்பட்டு மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் இளங்கோவன், மண்டல செயற்பொறியாளர் முருகேசன், செங்கல்பட்டு மற்றும் வேலூர் மண்டலங்களை சேர்ந்த 37 நகராட்சிகளின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story