சங்கராபரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவர்: உயிருடன் மண்ணில் புதைந்து வாலிபர் சாவு


சங்கராபரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியவர்: உயிருடன் மண்ணில் புதைந்து வாலிபர் சாவு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:30 AM IST (Updated: 15 Oct 2017 3:00 AM IST)
t-max-icont-min-icon

வில்லியனூர் அருகே சங்கராபரணி ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியபோது மண் சரிந்து விழுந்து உயிருடன் வாலிபர் பலியானார்.

வில்லியனூர்,

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே செட்டிப்பட்டு, ஒதியம்பட்டு ஆகிய பகுதிகளில் சங்கராபரணி ஆற்றில் மணல் அள்ளுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும் இதையும் மீறி இரவு, அதிகாலை நேரங்களில் மாட்டு வண்டி, டிப்பர் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் மணல் கொள்ளை வழக்கமாக நடந்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை ஆற்றின் புதைகுழியில் இறங்கி மணல் அள்ளியபோது மண் சரிந்ததில் வாலிபர் ஒருவர் உயிரோடு புதைந்து மூச்சுத்திணறி பரிதாபமாகச் செத்தார். இது பற்றிய விவரம் வருமாறு:-

வில்லியனூரை அடுத்த உத்திரவாகினிபேட் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவருடைய மகன் அரி (வயது 20). அதே பகுதியைச் சேர்ந்த ராஜவேலுவின் மகன் முருகவேலு (20). இவர்கள் இருவரும் மாட்டு வண்டி தொழிலாளர்கள். நேற்று அதிகாலை 6 மணி அளவில் இருவரும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள ஒதியம்பட்டு சங்கராபரணி ஆற்றுக்கு சென்றனர்.

ஆற்றில் ஏற்கனவே மணல் அள்ளியதால் புதைகுழிபோல் இருந்த இடத்தில் அவர்கள் இருவரும் இறங்கி மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென மண் சரிந்தது. இதில் உஷாரான முருகவேலு, அவசர அவசரமாக புதைகுழியில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார். அரியும் அங்கிருந்து வெளியேற முயன்றார். ஆனால் அதற்குள் அவர் மீது மணல் சரிந்து அமுக்கியது.

இதில் அவர் உயிரோடு மண்ணில் புதைந்தார். இதைப்பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த முருகவேலு உதவி கேட்டு கூச்சல் போட்டார். அவருடைய அலறல் சத்தம்கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து அரியை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் போலீசார் விரைந்து வந்து அரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணல் அள்ளச் சென்ற வாலிபர் அரி உயிரோடு மண்ணில் புதைந்து பலியான சம்பவம் உத்திரவாகினிபேட் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story