டெங்கு காய்ச்சலுக்கு சென்னை என்ஜினீயர் உள்பட 11 பேர் பலி


டெங்கு காய்ச்சலுக்கு சென்னை என்ஜினீயர் உள்பட 11 பேர் பலி
x
தினத்தந்தி 15 Oct 2017 5:00 AM IST (Updated: 15 Oct 2017 3:28 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலுக்கு சென்னை என்ஜினீயர் உள்பட 11 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ராயபுரம், 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலுக்கு தினமும் பலர் உயிரிழந்து உள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஆவூர் முத்தையாதெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது 9 மாத பெண் குழந்தை ரக்‌ஷிதாஸ்ரீ. கடந்த 4 நாட்களாக டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று குழந்தை இறந்தது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு ஒரத்தூரைச் சேர்ந்தவர் முத்தழகன் (வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் வேலை பார்த்து வந்தார். டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர், விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட முத்தழகன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கர்ப்பிணி

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த தேத்தாம்பட்டியைச் சேர்ந்தவர் சாவித்திரி (27). நிறைமாத கர்ப்பிணியான இவர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.

இதேபோல் உசிலம்பட்டி சொக்கத்தேவன் பட்டியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி மகாதேவி (15), துரைச்சாமிபுரம் புதூரைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் கபிலன் (9), வாடிப்பட்டியை அடுத்த போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காயத்ரி (19) ஆகியோரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகினர்.

சித்தமருத்துவர்

சேலம் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த 4-ம் வகுப்பு மாணவன் நந்தகோகுல் (9), நாமக்கல் பரமத்திவேலூர் நல்லியாம்பாளையத்தைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் ஹரினீஷ் (16), தஞ்சை மாவட்டம் செம்பியன்கிளரியைச் சேர்ந்த சிவக்குமார் (30), ஈரோடு மாவட்டம் அந்தியூர் சின்னபருவாச்சியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (23) ஆகியோரும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா இளையாங்கன்னியைச் சேர்ந்த சித்த மருத்துவர் குழந்தையேசு என்கிற அருண் (39) என்பவர் டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்தார். கடந்த 3 வாரங்களுக்குமுன்பு தான் இவருக்கு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story