மங்களூருவில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது


மங்களூருவில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது
x
தினத்தந்தி 15 Oct 2017 3:53 AM IST (Updated: 15 Oct 2017 3:52 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் நடந்த இரட்டை கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தில் இந்த கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

மங்களூரு, 

மங்களூரு அருகே பரங்கிப்பேட்டை பகுதியில் கடந்த மாதம் (செப்டம்பர்) அடையார் பகுதியை சேர்ந்த ஜியா, அவரது நண்பர் பயாஸ் ஆகியோர் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தனர். அப்போது அவர்களை மர்மநபர்கள் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இதில் ஜியா பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது நண்பர் பயாஸ் படுகாயமடைந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த இரட்டை கொலை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மங்களூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.

7 பேர் கைது

இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் கைதானவர்கள் நவுபால் என்கிற டீல் நவுபால் (வயது 25), அமீர் சொகைல் (24), முகமது பாசில் (25), ஆட்ரம் (29), மிக்‌ஷா (24), ஷக்லிம் (24), ஹர்ஷாத் (24) ஆகியோர் என்பதும், இவர்கள் அனைவரும் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் கொலையான ஜியா, பயாஸ் ஆகியோர் ஒரே ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்பதும், நவுபால் உள்பட 7 பேரும் மற்றொரு ரவுடி கும்பல் என்பதும், இந்த ரவுடி கும்பல்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இதுதொடர்பாக அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதத்தில் 7 பேரும் சேர்ந்து ஜியா, பயாஸ் ஆகியோரை தீர்த்துக்கட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதான 7 பேரும் விசாரணைக்கு பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மங்களூரு சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story