பெங்களூருவில் மழையால் பாதித்த பகுதிகளை தேவேகவுடா, எடியூரப்பா பார்வையிட்டனர்
பெங்களூருவில் மழையால் பாதித்த பகுதிகளை தேவேகவுடா மற்றும் எடியூரப்பா பார்வையிட்டார்கள். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அவர்கள் ஆறுதல் கூறினார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு தம்பதி உள்பட 5 பேர் பலியானார்கள். இந்த நிலையில், மழையால் பாதித்த பகுதிகளை நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா பார்வையிட்டார். பின்னர் அவர் குருபரஹள்ளிக்கு சென்றார். அங்கு சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு உயிர் இழந்த கோவில் பூசாரி வாசுதேவ் பட்டின் மனைவி, குடும்பத்தினரை சந்தித்து தேவேகவுடா ஆறுதல் கூறினார். மேலும் வாசுதேவ் பட்டின் குடும்பத்தினருக்கு ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் ரூ.1 லட்சத்தை தேவே கவுடா வழங்கினார்.
பின்னர் தேவேகவுடா நிருபர்களிடம் கூறுகையில், “பெங்களூருவில் பெய்த மழையால் 5 பேர் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததே நகரில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம். மழைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று சித்தராமையா அறிவித்துள்ளார். இது போதுமானது அல்ல. வாசுதேவ் பட் மனைவிக்கு அரசு வேலை, அவரது பிள்ளைகளுக்கு படிப்பை செலவை அரசு ஏற்கும் என்று சித்தராமையா கூறியுள்ளார். அதுபோல, பலியான மற்றவர்களின் குடும்பத்தினருக்கும் அரசு வேலை வழங்க வேண்டும்,“ என்றார்.
எடியூரப்பா பார்வையிட்டார்
இதுபோல, பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா, மத்திய மந்திரி சதானந்த கவுடா, முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் ஆகியோர் மழையால் பெரிதும் பாதித்த பீனியா, குருபரஹள்ளி, லக்கரே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் எடியூரப்பாவிடம் தங்களது குறைகளை கூறினார்கள்.
பின்னர் குருபரஹள்ளியில் பலியான சங்கரப்பா, கமலம்மாவின் குடும்பத்தினரையும், வாசுதேவ் பட்டின் மனைவியையும், நிங்கவ்வாவின் கணவரை சந்தித்தும் எடியூரப்பா, சதானந்தகவுடா, அசோக் ஆகியோர் ஆறுதல் கூறினார்கள். மேலும் அவர்களது குடும்பத்தினருக்கு பா.ஜனதா கட்சி சார்பில் தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story