பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: கொலையாளிகள் 2 பேரின் வரைபடங்கள் வெளியீடு


பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: கொலையாளிகள் 2 பேரின் வரைபடங்கள் வெளியீடு
x
தினத்தந்தி 15 Oct 2017 4:07 AM IST (Updated: 15 Oct 2017 4:07 AM IST)
t-max-icont-min-icon

கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடங்களை பெங்களூரு சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு விசாரணை குழு போலீசார் வெளியிட்டனர்.

பெங்களூரு, அக்.15-

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55).

பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவரை கடந்த மாதம்(செப்டம்பர்) 5-ந் தேதி அவருடைய வீட்டில் வைத்து மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் பற்றி உளவுத்துறை ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குழுவினர் கவுரி லங்கேஷ் வீடு மற்றும் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததுடன், அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் மற்றும் கர்நாடகத்தின் பிற பகுதிகளில் முகாமிட்டும் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். இருப்பினும், கொலையாளிகள் சிக்கவில்லை.

இதற்கிடையே, கொலையாளிகள் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படும் எனவும் கர்நாடக அரசு அறிவித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மந்திரி ராமலிங்க ரெட்டி, இந்த கொலையில் தொடர்புடைய கொலையாளிகள் பற்றி துப்பு கிடைத்து இருப்பதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் கூறினார்.

வரைபடங்கள் வெளியீடு

இந்த நிலையில், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடங்களை நேற்று பெங்களூரு சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு விசாரணை குழு போலீசார் வெளியிட்டனர். இதில், ஒரு கொலையாளியின் படம் 2 பரிமாணங்களில் வரையப்பட்டு இருந்தன.

மேலும், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் மோட்டார் சைக்கிளில் அவருடைய வீட்டு அருகே நோட்டமிட்டு செல்வது போன்ற வீடியோவையும் நேற்று சிறப்பு விசாரணை குழுவினர் வெளியிட்டனர். பின்னர், சிறப்பு விசாரணை குழு தலைமை அதிகாரி பி.கே.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

250 பேரிடம் விசாரணை

“கவுரி லங்கேஷ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை அடிப்படையில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடங்களை வரைந்து உள்ளோம். இவர்கள் 2 பேரும் 25 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கலாம். இந்த வழக்கு தொடர்பாக 250-க்கும் அதிகமானவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கவுரி லங்கேஷ் கொலைக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின்றன. தொழில்முறை போட்டியில் கொலை நடக்கவில்லை. இதை தவிர்த்து பிற கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறோம்.

கவுரி லங்கேஷ் 7.65 எம்.எம். ரக நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். முற்போக்கு சிந்தனையாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கலபுரகி ஆகியோரின் கொலைக்கும், கவுரி லங்கேசின் கொலைக்கும் சில ஒற்றுமைகள் இருப்பதாக மட்டுமே கூறினோம். நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கலபுரகி ஆகியோரின் கொலை வழக்குகளை விசாரிக்கும் விசாரணை குழுக்களிடம் இருந்து தோட்டாக்கள் வாங்கி விசாரணை நடத்தவில்லை. ஸ்காட்லாந்து யார்டு போலீசாரின் உதவியை நாடி இருப்பதாக வந்த தகவல்கள் பொய்யானது. எங்களுக்கு தேவைப்பட்டால் அவர்களின் உதவியை நாடுவோம்.

பொதுமக்களின் உதவி

கவுரி லங்கேசை கொலை செய்த கொலையாளிகள் ஒரு வாரத்திற்கு முன்பே பெங்களூரு வந்து தங்கி அவருடைய வீட்டு அருகே சென்று நோட்டமிட்டு இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால், பொதுமக்களின் உதவி தேவைப்படுகிறது. கொலையாளிகளின் வரைபடங்களை பார்க்கும் பொதுமக்கள் அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் உடனடியாக விசாரணை குழுவிடம் தெரிவிக்கலாம். துப்பு கொடுப்பவர்கள் பற்றிய ரகசியம் காக்கப்படுவதுடன், அரசு அறிவித்த வெகுமதியும் வழங்கப்படும்.

9480800304, 9480801701 என்ற வாட்ஸ்-அப் எண்களை தொடர்பு கொண்டோ அல்லது 9480800202 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ அல்லது sit.gl-a-n-k-esh@ksp.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ பொதுமக்கள் சிறப்பு விசாரணை குழுவுக்கு தகவல் அளிக்கலாம்.”

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது பெங்களூரு மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனுஜித் உள்பட சிறப்பு விசாரணை குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Next Story