நவநிர்மாண் சேனா கவுன்சிலர்கள் தாய் வீடு திரும்பி உள்ளனர் உத்தவ் தாக்கரே கருத்து
நவநிர்மாண் சேனா கவுன்சிலர்கள் சிவசேனாவில் இணைந்ததன் மூலம் தாய் வீடு திரும்பி இருப்பதாக உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
ராஜ் தாக்கரே தலைமையிலான மராட்டிய நவநிர்மாண் சேனாவை சேர்ந்த 6 கவுன்சிலர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, நேற்று முன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டில் மோடி அலை தேய்ந்துவிட்டது. தேர்தல்களில் வெற்றி பெற அனுதாப அலையை தான் பாரதீய ஜனதா நம்பி இருக்கிறது. மும்பை மாநகராட்சியில் எங்களது பலம் அதிகரித்து இருப்பதால், அவர்களுக்கு வயிறு எரிகிறது. அவர்கள் எல்லாம் என்ன மாதிரியான கூட்டணி கட்சி?.
வேட்டை
நவநிர்மாண் சேனா கவுன்சிலர்களை சிவசேனா வேட்டை ஆடிவிட்டதாக சொல்கிறார்கள். இதுபோன்ற நிகழ்வு பா.ஜனதா ஆளும் அருணாச்சல பிரதேசம் மற்றும் கோவா மாநிலங்களில் கூட நடந்திருக்கிறது. ஆகையால், நாங்கள் வேட்டையாடி விட்டதாக குற்றம் சாட்டாதீர்கள்.
இதை மற்றவர்கள் செய்தால் அதற்கு பெயர் சுயமரியாதை. நாங்கள் செய்தால், அது துரோகமா? நவநிர்மாண் சேனா கவுன்சிலர்கள் சிவசேனாவில் இணைந்த நிகழ்வு, தாய்வீடு திரும்புதல் போன்றது தான். இதில் வேறு எந்தவித உள்நோக்கமும் இல்லை. அவர்கள் விருப்பப்பட்டு தான் சேர்ந்தார்கள்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
Related Tags :
Next Story