ஒருமுறை பேட்டரி சார்ஜில் 1,772 கி.மீ.ஓடும் பஸ்


ஒருமுறை பேட்டரி சார்ஜில் 1,772 கி.மீ.ஓடும் பஸ்
x
தினத்தந்தி 15 Oct 2017 10:45 AM IST (Updated: 15 Oct 2017 10:45 AM IST)
t-max-icont-min-icon

பேட்டரியில் இயங்கும் வாகனங்களை மக்கள் அதிகம் விரும்பாததற்கு காரணம், அதில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பது தான்.

பேட்டரியில் இயங்கும் வாகனங்களை மக்கள் அதிகம் விரும்பாததற்கு காரணம், அதில் நீண்ட தூரம் பயணிக்க முடியாது என்பது தான். தற்போது அந்தக் குறையை நீக்கி உள்ளது அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா கார் நிறுவனம். இங்கு தயாரிக்கப்படும் பேட்டரி கார்களில், ஒரு முறை பேட்டரியை சார்ஜ் செய்தால், அதில் நான் ஸ்டாப்பாக 500 கி.மீ. போகலாம். இதுவொரு புதிய புரட்சி தான். ஆனால் அதையும் மிஞ்சிவிட்டது புரொடெர்ரர் நிறுவனம். இவர்கள் கேட்டலிஸ்ட் இ-2 மேக்ஸ் என்ற பஸ்சை சிங்கிள் பேட்டரி சார்ஜில் 1,772 கி.மீ. தூரம் ஓட வைத்து வாகன உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இன்டியானா மாகாணத்தில் உள்ள நேவிஸ்டார் புரோவிங் கிரவுண்ட்ஸ் என்ற வளாகத்தில் இந்த பஸ்சுக்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது, இந்த பஸ் குறிப்பிட்ட வேகத்தில் தொடர்ந்து இயக்கப்பட்டது. முடிவில் சிங்கிள் சார்ஜில் இந்த பஸ் 1,772.2 கி.மீ. தூரம் பயணித்து புதிய சாதனை படைத்தது. 40 மீட்டர் நீளமுடைய இந்த பஸ்சில் 660 கே.டபிள்யூ.ஹெஜ். திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. மிகத்திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்ட இந்த கனரக பஸ் 1,772 கி.மீ. பயணித்திருப்பது வாகன உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொது போக்குவரத்திற்கு உகந்த இதுபோன்ற கனரக மின்சார வாகனங்கள், இந்த அளவு சோதனை ஓட்டத்தில் பயணித்திருப்பது, வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தரும் வாய்ப்புகளை உருவாக்கி தரும் என்பதில் சந்தேகமில்லை.

12 மீட்டர் நீளம் கொண்ட டீசல்-பெட்ரோலில் ஓடக்கூடிய பெரிய பஸ்களின் யுகம் முடிவுக்கு வந்து விட்டது என்றும், இனி மின் வாகனங்களுக்கே எதிர்காலம் என்றும், அமெரிக்காவைச் சேர்ந்த புரொடெர்ரர் நிறுவனம் ஊடகங்களிடம் கூறியிருக்கிறது. அதுமட்டுமல்ல, கேட்டலிஸ்ட் இ-2 வாகனத்திற்கு டிரைவர் இல்லாமல் ஓடும் தொழில்நுட்பத்தையும் கொண்டு வர ஆராய்ச்சி நடைபெறுகிறது. அது வெற்றியடைந்தால், ஓட்டுநர் இல்லாமல் ஆயிரம், கி.மீ., தூரம் பஸ்சை ஓடவைக்க முடியும். 

Next Story