சிலிண்டர் வெடித்ததாக வெளியான புரளியால் பரபரப்பு பொதுமக்கள் அலறியடித்து வெளியேறியதால் 20 பேர் காயம்


சிலிண்டர் வெடித்ததாக வெளியான புரளியால் பரபரப்பு பொதுமக்கள் அலறியடித்து வெளியேறியதால் 20 பேர் காயம்
x
தினத்தந்தி 15 Oct 2017 11:00 PM GMT (Updated: 15 Oct 2017 7:37 PM GMT)

சென்னை பாடியில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் சிலிண்டர் வெடித்ததாக வெளியான புரளியால், அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து வெளியேறினர். இதில் 20 பேர் காயம் அடைந்தனர்.

அம்பத்தூர்,

சென்னை அண்ணாநகர் பாடியில் ‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ்’ கடை உள்ளது. 9 மாடிகள் கொண்ட இந்த கடையின் 9–வது மாடியில் உணவகம் உள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று ஏராளமான பொதுமக்கள் கடையில் குவிந்து இருந்தனர்.

மாலை 6.30 மணியளவில் உணவகத்தில் உள்ள தரையில் பதிக்கப்பட்டு இருந்த டைல்ஸ் கற்கள் திடீரென பாரம் தாங்காமல் உடைந்து சிதறியது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் இடையே உணவகத்தில் உள்ள கியாஸ் சிலிண்டர் வெடித்து விட்டதாகவும், நில நடுக்கம் ஏற்பட்டதால்தான் டைல்ஸ் கற்கள் வெடித்ததாகவும் புரளி கிளம்பியது.

இதனால் உணவகத்தில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு அவசர அவசரமாக கீழே இறங்கி ஓடினர்.

இந்த தகவல் மளமளவென அனைத்து தளங்களுக்கும் பரவியது. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பீதியில் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு கீழே இறங்கி ஓடினர். இதில் பலர் இடிபாடுகளில் சிக்கியும், மிதி பட்டும் காயம் அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர், ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் கொரட்டூர், அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன்பிறகுதான் கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் கற்கள் பாரம் தாங்காமல் நொறுங்கியது தெரிந்தது.

நெரிசலில் சிக்கி லேசான காயம் அடைந்த சுமார் 20 பேர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலர் தாங்கள் வாங்கிய துணிகளுக்கு பணம் கொடுக்காமலும், மற்றவர்கள் பணம் கொடுத்து வாங்கி வைத்து இருந்த துணிகளையும் எடுத்துச்சென்று விட்டதாக கடை ஊழியர்கள் தெரிவித்தனர். இதனால் பணம் கொடுத்து துணி வாங்கிய பலர், தங்கள் துணிகளை பறிகொடுத்து நின்றனர்.

பொதுமக்கள் சிதறி ஓடியபோது விலைஉயர்ந்த தங்கள் செல்போன்கள் தவறி விழுந்து விட்டதாகவும், மணிபர்ஸ், பெண்களின் கைப்பைகள் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனதாகவும் பலர் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக பாடி பாலம், அண்ணாநகர், அம்பத்தூர், வில்லிவாக்கம் பகுதியில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு இணை கமி‌ஷனர் சந்தோஷ்குமார் தலைமையில் போலீசார் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீரமைத்து பொதுமக்களை அனுப்பி வைத்தனர். அதன்பிறகு கடை வழக்கம் போல் செயல்பட்டது. ஆனால் உணவகத்துக்கு செல்வதற்கு மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story