சிக்கமகளூருவில், பெண்ணின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கிய மர்ம நபர்

சிக்கமகளூருவில், பெண்ணின் கைப்பையை ‘அபேஸ்’ செய்து அதில் இருந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கிய மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் சாமேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிதேவி. இவர் நேற்று முன்தினம் மல்லேனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் வங்கிக்கு சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு மர்மநபர், லட்சுமிதேவியின் கைப்பையை ‘அபேஸ்’ செய்து கொண்டு தப்பி ஓடிவிட்டார். அந்த கைப்பையில் அவருடைய வங்கி கணக்கு புத்தகம், ஏ.டி.எம். கார்டு மற்றும் அதன் ரகசிய எண், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை இருந்ததாக தெரிகிறது.
சிறிது நேரத்தில் தனது கைப்பை திருடு போனதை அறிந்த லட்சுமிதேவி அதிர்ச்சியட்ந்தார். மேலும் சிறிது நேரத்தில் அவருடைய செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது.
அதில் ரூ.40 ஆயிரம் மதிப்பில் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கப்பட்டு இருந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அதாவது கைப்பையை திருடிச்சென்ற மர்ம நபர் அதில் இருந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியது லட்சுமிதேவிக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் இதுபற்றி சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமிதேவியின் கைப்பையை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகின்றனர்.