தீபாவளி பண்டிகையையொட்டி அலைமோதும் மக்கள் கூட்டம் போலீசார் தீவிர கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையையொட்டி அலைமோதும் மக்கள் கூட்டம் போலீசார் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 16 Oct 2017 4:15 AM IST (Updated: 16 Oct 2017 3:23 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் உள்ள கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கோவை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தீபாவளி பொருட்கள் வாங்குவதற்காக கோவையில் உள்ள அனைத்து கடைவீதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

குறிப்பாக கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.

நேற்று விடுமுறை என்பதால் கிராஸ்கட் ரோடு, ஒப்பணக்கார வீதி, பெரிய கடைவீதி ஆகிய கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர். மேலும் ஆங்காங்கே தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டு, அங்கு வாகனங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடை வீதிகளில் கூட்டத்தை பயன்படுத்தி ஜேப்படி செய்யும் மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படை போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பொதுமக்கள் கூட்டம் காரணமாக டவுன்ஹால், ஒப்பணக்காரவீதி, பெரியகடைவீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

தீபாவளி பண்டிகைக்காக வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் கோவை ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. சென்னை மற்றும் தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரெயில்களில் பட்டாசுகள் எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கோவை ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரையும் போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர். அங்குள்ள ஸ்கேனிங் கருவி மூலம் பயணிகள் கொண்டு வரும் பைகள் சோதனையிடப்பட்டது.

சில பயணிகள் தாங்கள் கொண்டு வந்த பைகளில் பட்டாசுகளை வைத்து இருந்தனர். அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள கடைவீதிகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது இதை பயன்படுத்தி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பணம் மற்றும் பொருட்களை பறிக்க சிலர் முயற்சி செய்வார்கள். எனவே தெரியாத நபர்களிடம் யாரும் பேச வேண்டாம். அவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டாம்.

சந்தேகத்துக்கு இடமாக யாராவது சுற்றித்திரிந்தால், உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்கலாம். அதிகளவில் பணம் மற்றும் பொருட்களை எடுத்துச்செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Tags :
Next Story