பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்: அரசு உத்தரவிட்டால் மட்டும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது


பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்: அரசு உத்தரவிட்டால் மட்டும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது
x
தினத்தந்தி 16 Oct 2017 4:30 AM IST (Updated: 16 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

அரசு உத்தரவிட்டால் மட்டும் டெங்குவை கட்டுப்படுத்த முடியாது என்றும், பொதுமக்கள் ஒத்துழைத்து சுகாதாரத்தை பேண வேண்டும் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நேற்று திடீர் ஆய்வு செய்தார். காய்ச்சல் தனிப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு உள்ளிட்ட வார்டுகளுக்கு சென்று அவர் ஆய்வில் ஈடுபட்டார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகள், நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து தாய்மார்கள் மற்றும் உறவினர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் இறக்கவில்லை. வைரஸ் காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, நாள்பட்ட உடலியல் காரணங்கள் போன்றவற்றால் சிலர் இறந்துள்ளனர். சிலுவத்தூரை சேர்ந்த நந்தினி, குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் உள்பட 4 பேர் வைரஸ் காய்ச்சலால் இறந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 39 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து பலர் குணமாகி வீடு திரும்பிவிட்டனர். 4 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

5 பேர் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் குணமாகி வீட்டுக்கு சென்றவர்களையும், தொடர்ந்து 3 நாட்கள் கிராம சுகாதார செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.

மாத்திரைகள் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயமே மிகச்சிறந்த மருந்து என்று மத்திய குழுவில் உள்ள டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். எனவே தொடர்ந்து நோயாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படும்.

அரசு உத்தரவிட்டால் மட்டும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் ஆகும். பொதுமக்களும் தொடர்ந்து சுற்றுப்புற சுகாதாரத்தை பேண வேண்டும். அப்போது தான் டெங்கு காய்ச்சலை முழுவதுமாக ஒழிக்க முடியும். டாக்டர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் விவரம் வருமாறு:-

கேள்வி:- திண்டுக்கல் மாநகராட்சி ஊழியரின் மகன் உள்பட பலர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். ஆனால் ஒருவர் கூட இறக்கவில்லை என்று கூறுகிறீர்களே?

பதில்:- டெங்கு காய்ச்சலால் தான் பலியானார்கள் என்பதற்கான சான்றிதழை காட்டுங்கள்.

கேள்வி:- திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாயக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறதே?

பதில்:- சாயக்கழிவுகளை கொட்டிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், பொள்ளாச்சியை சேர்ந்த புரோக்கர்கள் 2 பேரை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கேள்வி:- சாயக்கழிவுகள் கொட்டுவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

பதில்:- போலீஸ் சோதனை சாவடிகள் வழியாக வரும் லாரிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. சாயக்கழிவுகளை கொண்டு வந்து கொட்டுபவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேள்வி:- சந்தானவர்த்தினி, குடகனாறு உள்ளிட்ட ஆறுகளில் லாரிகள் மூலம் மணல் திருடப்படுகிறதே?

பதில்:- மணல் திருடர்களும் பாரபட்சமின்றி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் மற்றும் அரசு டாக்டர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக, திண்டுக்கல் அருகே உள்ள பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி ராம்நகரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலர் பலியாகி உள்ளதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர், திண்டுக்கல் மாவட்டத்தில் டெங்குவுக்கு ஒருவர் கூட பலியாகவில்லை. டெங்குவால் இறந்தார் என்று யாராவது ஒருவரை சொல்லுங்கள் என்று சவால் விடுக்கும் வகையில் ஆவேசமாக பேசினார்.

Next Story