வரதட்சணை கொடுமையால் பெண், குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை
நாசிக் மாவட்டத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக பெண் தன் 2 வயது குழந்தையுடன் குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
நாசிக்,
நாசிக் மாவட்டம் பாக்லேன் தாலுகா சார்தே கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி அர்ச்சனா(வயது 24). இவர்களுக்கு 2 வயதில் நகுல் என்ற மகன் இருந்தார்.
மனோஜ் தன் தந்தை ராம்ராவ் மற்றும் தாய் சரளாவுடன் சேர்ந்து அர்ச்சனாவை வீட்டில் கூடுதல் வரதட்சணை வாங்கிவருமாறு கூறி கொடுமை படுத்தி வந்ததாக தெரிகிறது. ஆனால் பிறந்த வீட்டின் ஏழ்மை நிலை காரணமாக மனோஜ் கேட்கும் வரதட்சணையை அர்ச்சனாவின் பெற்றோரால் கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் தொடர் துன்புறுத்தலின் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த அர்ச்சனா தன் வாழ்க்கையை முடித்துக்கொள்வது என்ற விபரீத முடிவை எடுத்தார். தான் இறந்துவிட்டால் குழந்தையை யார் காப்பார் என்று கலக்கம் அடைந்த அவர் சம்பவத்தன்று, தன் குழந்தையுடன் வீட்டிற்கு விவசாய நிலத்திற்கு சென்றார்.
அங்குள்ள குளத்தில் மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையுடன் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். இதற்கிடையே வீட்டில் அர்ச்சனாவை காணாததால் கணவனும், அவரது பெற்றோரும் அவளை தேடி அலைந்தனர். இந்த நிலையில் குளத்தில் அவர் பிணமாக மிதப்பதை பார்த்து சிலர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அர்ச்சனாவின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் மனோஜ் மற்றும் அவரின் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.