அரசு பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் நீரில் டெங்கு புழுக்கள்


அரசு பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் நீரில் டெங்கு புழுக்கள்
x
தினத்தந்தி 16 Oct 2017 4:18 AM IST (Updated: 16 Oct 2017 4:18 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி அருகே சீமானூத்து அரசு பள்ளியில் மாணவர்கள் குடிக்கும் குடிநீரில் டெங்கு கொசு புழுக்கள் பார்த்த வருவாய் கோட்டாட்சியர்,

உசிலம்பட்டி,

ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க அறிவுறுத்தினார்.

உசிலம்பட்டி அருகே சீமானூத்து கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. அதில் வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா தலைமை வகித்தார். தாசில்தார் ராமசந்திரன், சமுக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஹேமா, வருவாய் ஆய்வாளர் முத்துராமன், துணை தாசில்தார் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொது மக்களிடம் இருந்து 33 மனுக்கள் பெறப்பட்டன. அதில் நீதிபதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் சீமானூத்து அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். பின்பு அங்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதில் பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட நோய்களை கண்டறிந்து மருந்துகள் வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் டெங்கு காய்ச்சலை தடுக்க கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளையும் தூய்மையாக வைக்கவும், சுத்தமான குடிநீரை அருந்தவும் கேட்டுக்கொண்டார். மேலும் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் உள்பட அடிப்படை வசதிகளை அவர் ஆய்வு செய்தார். பின்பு அங்குள்ள அரசு பள்ளியில் ஆய்வு செய்த போது, மாணவர்கள் குடிக்கும் தண்ணீரில் டெங்கு கொசு உற்பத்தியாகும் புழுக்கள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுதொடர்பாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களுக்கு சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க அறிவுறுத்தினார். மேலும் பள்ளி வளாகத்தை குப்பைகள் இல்லாமல் சுகாதார முறையில் நடத்தவும் கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூமா ராஜா, முன்னாள் தலைவர் டி.ஆர்.பால்பாண்டி, துணை தலைவர் பாண்டியம்மாள் செல்வராஜ், முன்னாள் கவுன்சிலர் ஏட்டாள் பழனி, மணி வண்ணன், சுப்பிரமணி, ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையாளர் தெய்வராமன் உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story