சூப்பர் கிருமிகளைக் கொல்லும் ‘குவாண்டம் டாட்’ மருந்து
‘குவாண்டம் டாட்’ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆண்டி பயாடிக் மருந்துகள் சுமார் ஆயிரம் மடங்கு அதிக வீரியத்துடன் பாக்டீரியாக்களை கொன்றதும் இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்ற பழமொழியை நம்மில் பலரும் கேட்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த உலகத்தை, உயிர்களின் பரிணாமத்தின் தொடக்க காலத்தில் தோன்றிய கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகள் தொடங்கி மிகவும் அதிகபட்ச பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் வரையிலான அனைத்து உயிர்களும் சொந்தம் கொண்டாடுகின்றன. இதில் யார் பெரியவன் அல்லது பலசாலி என்ற போட்டி தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது.
இதில் சுவாரசியமான சில போட்டியாளர்களும் உண்டு. உதாரணமாக, பரிணாமத்தின் தொடக்கத்தில் தோன்றிய பாக்டீரியாக்கள் (முக்கியமாக சூப்பர் கிருமி) மற்றும் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இடையிலான போட்டியைக் கூறலாம். நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்களில் பல்வேறு வகையான ஆண்டிபயாடிக் அல்லது கிருமிநாசினி மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் கொண்ட மிக மிக ஆபத்தான ஒரு வகை பாக்டீரியாக்களையே சூப்பர் கிருமிகள் (Super bugs) என்கிறது அறிவியல்.
பொதுவாக, காசநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் அவற்றைக் கொல்ல பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புத்திறனை ஏற்படுத்திக்கொண்டே போவதால் அவற்றைக் கொல்லும் சிகிச்சைகளை உருவாக்குவது முடியாத காரியமாகிவிடுகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண ‘குவாண்டம் டாட்கள்’ (Quantum dots) என்று அழைக்கப்படும் நானோ துகள்களை பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது அமெரிக்காவிலுள்ள கொலராடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழு ஒன்று.
‘குவாண்டம் டாட்’ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆண்டி பயாடிக் மருந்துகள் சுமார் ஆயிரம் மடங்கு அதிக வீரியத்துடன் பாக்டீரியாக்களை கொன்றதும் இந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனித உடலுக்குள் மருந்துகள் மற்றும் இதர மூலக் கூறுகள் எப்படி ஊடுருவி செல்கின்றன அல்லது பயணிக்கின்றன என்பதைக் கண்டறிய பயன்படுத்தப்பட்டு வரும் ஒருவகையான நானோ துகள்களே ‘குவாண்டம் டாட்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘குவாண்டம் டாட்கள்’ ஒரு டி.என்.ஏ இழையின் அகலம் மற்றும் 3 நானோமீட்டர் குறுக்களவு கொண்டது என்று கூறப்படுகிறது. பொதுவாக ஒளி மின்னணுவியலில் பயன்படுத்தப்படும் இந்த குவாண்டம் டாட்கள் காட்மியம் டெல்லியூரைடு (cadmium telluride) எனும் ரசாயனத்தால் ஆனவை.
இவற்றில் உள்ள எலக்ட்ரான்கள் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட பச்சை நிற ஒளியால் தூண்டப்படுவதன் காரணமாக ஆக்சிஜன் மூலக்கூறுகளுடன் இணைந்து சூப்பர் ஆக்சைடு (Super Oxide) எனும் ரசாயனத்தை உற்பத்தி செய்கின்றன. சூப்பர் ஆக்சைடை உறிஞ்சும் பாக்டீரியாக்கள் உடல் நிலைகுலைந்து ஆண்டிபயாடிக் தாக்கத்துக்கு பலியாகின்றன என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
முக்கியமாக, இந்த ஆய்வில் சுமார் 5 வகையான ஆண்டிபயாடிக் மருந்துகள் வெவ்வேறு அளவிலான குவாண்டம் டாட்களுடன் கலக்கப்பட்டு, ஸ்டாபைலோகாக்கஸ் ஆரியஸ் (Staphylococcus aureus) மற்றும் சால்மோனெல்லா (ஷிணீறீனீஷீஸீமீறீறீணீ) உள்ளிட்ட, மருந்து எதிர்ப்புத்திறன் கொண்ட 5 வகையான பாக்டீரியாக்களை கொல்லும் திறன் பரிசோதிக்கப்பட்டது. இதில் மிகக்குறைவான அளவு மருந்து மூலமாக பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
தற்போது அமெரிக்காவில் மட்டுமே வருடத்துக்கு சுமார் 20 லட்சம் மக்கள் பாக்டீரிய மருந்து எதிர்ப்புத்திறன் (Antibiotic resistance ) பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது உலக சுகாதார மையம். இந்த பிரச்சினையை தீர்க்கக்கூடிய குவாண்டம் டாட் ஆண்டிபயாடிக் மருந்துகள், இன்னும் பல்வேறு வகையான மருத்துவ பரிசோதனைகளைக் கடந்துவந்தால்தான் பாக்டீரியாவுக்கு எதிரான போரில் வெற்றிவாகை சூடி சாதனைகள் படைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story