மாறும் தன்மை கொண்ட ‘கருப்பு ஆற்றல்’
மனிதர்களால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியாத ஒருவகை மர்ம ஆற்றல்தான் கருப்பு ஆற்றல் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.
‘கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு’ என்ற அவ்வையாரின் அமுதமொழி மனிதர்களுக்கு கற்றலின் அவசியத்தை மிகத் தெளிவாக உணர்த்தும் ஒரு சோற்றுப் பதம். எந்த சூழலிலும் கற்றது கையில் அள்ளக்கூடிய மண்ணின் அளவுதான் என்றும், நாம் கல்லாதது அல்லது கற்றுக்கொள்ள வேண்டியது இவ்வுலகம் அளவுக்கு மிகப்பெரியது என்று பொருள்படும் அவ்வைப் பாட்டியின் மூதுரையானது இன்றைய நவீன உலகில் நாம் கற்கும் எல்லாத் துறைகளுக்கும் பொருந்தும்.
உதாரணமாக, அண்டம் அல்லது பிரபஞ்சப் பெருவெளியை எடுத்துக்கொண்டால், பிரபஞ்சத்தில் உள்ள நம்மால் காணக் கூடிய பருப்பொருளின் அளவு வெறும் 5 சதவீதம் என்கின்றன இதுவரையிலான வானியல் ஆய்வுகள். ஆனால் பிரபஞ்சத்தின் மீதமுள்ள 95 சதவீதம் என்னவென்று கேட்டால், நம் கண்ணுக்குத் தெரியாத கருப்பு பருப்பொருள் (Dark matter) சிறு அளவும், மீதம் மொத்தமும் ‘கருப்பு ஆற்றல்’ (Dark energy) எனப்படும் (மனிதர்களால் இன்னும் விளங்கிக்கொள்ள முடியாத) ஒருவகை மர்ம ஆற்றல்தான் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள்.
வானியல் ஆய்வாளர்களால் இன்னும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியவில்லை என்றபோதும் கருப்பு பருப்பொருளும், பிரபஞ்சம் மொத்தத்தையும் ஆக்கிரமித்து இருப்பதாக தற்போது கருதப்படும் ‘கருப்பு ஆற்றல்’ ஆகியவை இருப்பது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களை வானியல் ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக சேகரித்த வண்ணமாகவே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக, கருப்பு பருப்பொருள் மற்றும் ஆற்றல் ஆகியவை கண்ணுக்கு புலப்படாமல் இருந்தாலும்கூட ‘ஈர்ப்பு சக்தி’ (gravity) உடனான வினைகள் மூலமாக அவற்றின் விளைவுகளை நம்மால் காண முடிகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். மிக முக்கியமாக, சூரியன் மற்றும் பூமி உள்ளிட்ட நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் புகலிடமாக இருக்கக்கூடிய அண்டப் பெருவெளியானது தொடர்ந்து விரிவடைந்துகொண்டே வருகிறது என்றும், அந்த விரிவடைதலை தூண்டும் சக்தியே கருப்பு ஆற்றல்தான் என்றும் இதுவரை பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இந்த கருப்பு ஆற்றலானது, மாறாத பண்பு கொண்ட ஒரு ‘வெற்றிட ஆற்றல்’ (Vacuum energy) என்று கூறினார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஆனால், கருப்பு ஆற்றலானது தொடர்ந்து மாற்றமடையும் (dynamic) பண்பு கொண்டது என்பதற்கான ஆதாரங்களை சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டறிந்துள்ளனர் அமெரிக்காவில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் போர்ட்ஸ்மவுத் (University of Portsmouth’s) மற்றும் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்மாலஜி மற்றும் கிராவிடேஷன் (Institute of Cosmology and Gravitati-on) ஆகிய ஆய்வு மையங்களைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள்.
கடந்த நூற்றாண்டின் இறுதியில் கண்டறியப்பட்ட கருப்பு ஆற்றல் இன்னும் ஒரு புரியாத புதிராகத்தான் இருந்து வருகிறது என்கிறார் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்மாலஜி மற்றும் கிராவிடேஷன் நிறுவனத்தின் இயக்குனரான பாப் நிக்கோல். இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள கருப்பு ஆற்றலின் மாறும் பண்பு குறித்த ஆதாரங்கள், அண்டங்களின் தொடக்கத்தின் போது இருந்த புரோட்டான் மற்றும் நியூட்ரான் கலவையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களை துல்லியமாகக் கணக்கிட்டதன் அடிப்படையில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகச் சொன்னால், இதற்கு முன்னர் ‘மாற்றமடையாத ஒரு வெற்றிட ஆற்றலாகக் கருதப்பட்ட கருப்பு ஆற்றலானது தொடர்ந்து மாற்றமடையும் தன்மை கொண்ட சக்திவாய்ந்த ஒரு ஆற்றல்’ என்பது இந்த ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக, கருப்பு ஆற்றல் குறித்த இந்த புதிய உண்மையை உறுதி செய்ய, அடுத்த தலைமுறை கருவியான ‘டார்க் எனெர்ஜி ஸ்பெக்டரோஸ்கோப்பிக் இன்ஸ்ட்ரூமென்ட் சர்வே’ (Dark Ener-gy Spectroscopic Instrument (DESI) survey) வைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், மிகவும் சக்திவாய்ந்த தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (James Webb Space Telescope) கருவியும் கருப்பு ஆற்றல் தொடர்பான பல மர்மங்களை விளக்கக்கூடிய ஆய்வுகளை மேற்கொள்ள பெரிதும் உதவும் என்று கூறப்படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story