அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலி
அம்பத்தூரில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுமி பலியாகி இருக்கிறாள்.
அம்பத்தூர்,
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் பலர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி உள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழக அரசும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியிலும், கொசு ஒழிப்பு பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னையை அடுத்த அம்பத்தூர், கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் ஜமுனா (வயது 7), அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 3–ம் வகுப்பு படித்துவந்தாள். ஜமுனாவுக்கு தொடர் காய்ச்சல் இருந்தது.
இதனால் ஜமுனா எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 14–ந் தேதி அனுமதிக்கப்பட்டாள். மருத்துவ பரிசோதனையில் ஜமுனாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக தெரியவந்தது. அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று முன்தினம் இரவு ஜமுனா சிகிச்சை பலனின்றி இறந்தாள்.
அம்பத்தூர் பகுதியில் கடந்த 10 நாட்களில் இதுவரை 4 குழந்தைகள் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்துள்ளது இப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.