பாலாற்றில் 10 தடுப்பணை கட்ட ஒதுக்கிய ரூ.1,700 கோடி என்ன ஆனது? துரைமுருகன் கேள்வி


பாலாற்றில் 10 தடுப்பணை கட்ட ஒதுக்கிய ரூ.1,700 கோடி என்ன ஆனது? துரைமுருகன் கேள்வி
x
தினத்தந்தி 17 Oct 2017 4:30 AM IST (Updated: 17 Oct 2017 3:49 AM IST)
t-max-icont-min-icon

பாலாற்றில் 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட தி.மு.க. ஆட்சியில் ஒதுக்கப்பட்ட ரூ.1,700 கோடி என்ன ஆனது என முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர்,

கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களிலும், வேலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன. ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் வேலூரில் ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில் வேலூர் செல்லியம்மன் கோவில் அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தை முன்னாள் அமைச்சர் துரைமுருகன் நேற்று காலை பார்வையிட்டார். கவசம்பட்டு, கழிஞ்சூர் ஏரிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறிய தாவது:-

பாலாறு பழைய பாலம் அருகே அதிக அளவில் மணல்அள்ளப்பட்டுள்ளதால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஆபத்தான நிலையில் உள்ளது. பாலத்தை பராமரிக்க டெண்டர் எடுத்தவர்கள் பாலத்தை சரியாக பராமரிக்கவில்லை. அதிகாரிகளிடத்தில் கேட்டால் அவர்களும் சரியான பதில் சொல்வதில்லை.

பாலாற்றில் வரும் வெள்ளம் வீணாக கடலில் சென்று கலப்பதை தடுத்து தண்ணீரை தேக்கி வைப்பதற்கு தமிழ்நாட்டில் பாலாறு தொடங்கும் இடத்தில் இருந்து முடியும் இடத்தின்வரை 10 இடங்களில் தடுப்பணைகள் கட்ட தி.மு.க. ஆட்சியில் திட்டம்தீட்டி அதற்காக உலக வங்கியில் இருந்து ரூ.1,700 கோடிபெற்று நிதி ஒதுக்கப்பட்டது. அதற்குள் ஆட்சி மாறிவிட்டதால் தடுப்பணைகள் கட்டமுடியாமல் போய் விட்டது.

தற்போதுள்ள ஆட்சியில் தடுப்பணைகளும் கட்டவில்லை, அதற்காக ஒதுக்கப்பட்ட பணமும் என்ன ஆனது என்பதும் தெரியவில்லை. அம்மா இட்லி சாப்பிட்டார் என்று கூறியவர்தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவர் பொய்சொல்ல மாட்டார். தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் இல்லை என்று அவர் கூறுகிறார். அமைச்சர்களின் வீட்டில் உள்ளவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் தான் அவர்கள் டெங்கு இருப்பதை ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக் கிறேன்.

தமிழ்நாட்டில் நடப்பது குடிசைத்தொழில் ஆட்சி. இந்த ஆட்சி விரைவில் வீட்டுக்கு செல்லும். காட்பாடி ‘டெல்’ தொழிற்சாலை நஷ்டத்தில் இயங்குவதாகக்கூறி அதை மூடிவிட்டனர். அதை மத்திய அரசுக்கு நெருக்கமான ஒருவருக்கு விற்கப்போவதாக கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story