கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவியுடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவியுடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Oct 2017 4:15 AM IST (Updated: 17 Oct 2017 3:49 AM IST)
t-max-icont-min-icon

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மனைவியுடன் கூலித்தொழிலாளி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா. இவர்கள் இருவரும் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர், முருகேசன், அவரது மனைவி விஜயாவின் உடலில் மண்எண்ணெயை ஊற்றிவிட்டு அதை தனது உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து, இருவரையும் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து முருகேசனிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு விசாரணை நடத்தியபோது, உறவினர் ஒருவர் ரூ.5 லட்சத்தை தராமல் ஏமாற்றி வருவதாகவும், இது தொடர்பாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றோம் என்றும் அந்த தம்பதியினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து கூலித்தொழிலாளி முருகேசன் கூறியதாவது:-

நடவடிக்கை எடுக்க வேண்டும்

எனக்கு சொந்தமான நிலத்தை உறவினர் ஒருவர், ஓட்டல் அதிபருக்கு விற்பனை செய்தார். அதன்மூலம் எனக்கு சேரவேண்டிய ரூ.5 லட்சத்தை தராமல் ஏமாற்றிவிட்டார். இதுபற்றி கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மூலம் மிரட்டல் வருகிறது. ஏற்கனவே, இந்த பிரச்சினை தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பணம் தரவேண்டிய உறவினர் கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்த்து வருவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளும், போலீசாரும் பயப்படுகிறார்கள். இதனால்தான் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க முயன்றேன். எனது நிலத்தை விற்பனை செய்துவிட்டு பணத்தை தராமல் ஏமாற்றி வரும் அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனைவியுடன் கூலித்தொழிலாளி திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story