கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் உதவியாளருக்கு தொடர்பா?


கவுரி லங்கேஷ் சுட்டுக்கொலை: பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் உதவியாளருக்கு தொடர்பா?
x
தினத்தந்தி 17 Oct 2017 4:12 AM IST (Updated: 17 Oct 2017 4:12 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேசை சுட்டுக்கொலை செய்ததாக கொலையாளிகளின் வரைபடங்களை

பெங்களூரு,

சிறப்பு விசாரணை குழு வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் உதவியாளருக்கு தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ்(வயது 55). பத்திரிகையாளரும், எழுத்தாளருமான இவரை கடந்த மாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி அவருடைய வீட்டில் வைத்து மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் பற்றி உளவுத்துறை ஐ.ஜி. பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு விசாரணை குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இருப்பினும், கொலையாளிகள் இன்னும் சிக்கவில்லை.

இந்த நிலையில், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 2 நபர்களின் வரைபடங்களை கடந்த 14-ந் தேதி சிறப்பு விசாரணை குழுவினர் வெளியிட்டனர். இதில், ஒரு கொலையாளியின் படம் 2 பரிமாணங்களில் வரையப்பட்டு இருந்தது. மேலும், கவுரி லங்கேசை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் மோட்டார் சைக்கிளில் அவருடைய வீட்டின் அருகே நோட்டமிட்டு செல்வது போன்ற வீடியோவையும் சிறப்பு விசாரணை குழுவினர் வெளியிட்டனர். அத்துடன், வரைபடங்களில் உள்ள கொலையாளிகள் பற்றி விவரங்கள் தெரிந்தால் உடனடியாக சிறப்பு விசாரணை குழுவை தொடர்பு கொள்ளும்படி பொதுமக்களிடம் கேட்டு கொண்டனர்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. உதவியாளருக்கு தொடர்பா?
இந்த நிலையில், துமகூரு புறநகர் சட்டசபை தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடாவின் உதவியாளர் பிரபாகரின் முகமும், சிறப்பு விசாரணை குழுவினர் கொலையாளிகள் என சந்தேகித்து வெளியிட்ட ஒரு வரைபடமும் ஒத்துபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், கவுரி லங்கேஷ் கொலைக்கும், அவருக்கும் தொடர்பு உள்ளதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபாகர் கூறுகையில், ‘எனக்கும், சிறப்பு விசாரணை குழு வெளியிட்ட வரைபடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை‘ என்றார்.

இதுகுறித்து, சிறப்பு விசாரணை குழு தலைமை அதிகாரி பி.கே.சிங் கூறுகையில், “இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் நோக்கத்தில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வரைபடங்களை வெளியிட்டு உள்ளோம். இந்த வரைபடங்களை ஒத்துபோய் யாரேனும் இருந்தால் தேவைப்படும்போது அவர்களை பிடித்து விசாரணை நடத்துவோம்”என்றார்.

Next Story