மும்பை மேயர் காரில் உள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்ற வேண்டும்
மும்பை மேயர் காரில் பொருத்தப்பட்டுள்ள சிவப்பு சுழல் விளக்கை அகற்றுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியது.
மும்பை,
நாட்டில் வி.ஐ.பி. கலாசாரத்தை ஒழிக்கும் பொருட்டு பிரதமர், மத்திய மந்திரிகள், மாநில முதல்–மந்திரிகள், மந்திரிகள் மற்றும் அதிகாரிகளின் காரில் பயன்படுத்தப்படும் சிவப்பு சுழல் விளக்கை அகற்றுமாறு மத்திய அரசு கடந்த மே 1–ந் தேதி உத்தரவிட்டது. அதே வேளையில், ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டது.
அதன்படி, மராட்டியத்தில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மந்திரிகள் தங்களது காரில் பொருத்தப்பட்ட சிவப்பு சுழல் விளக்குகளை அகற்றினர்.
எனினும், மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வரின் காரில் இருந்து இன்னமும் சிவப்பு சுழல் விளக்கு அகற்றப்படவில்லை. ஆகையால், உடனடியாக மேயர் காரில் உள்ள சுழல் விளக்கை அகற்றுமாறு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், மாநகராட்சியின் நிர்வாக என்ஜினீயருக்கு (போக்குவரத்து) நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதுபற்றி மேயரிடம் கேட்டபோது, ‘‘இதுபோன்ற எந்தவொரு நோட்டீசும் எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு நோட்டீஸ் அனுப்ப வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு அதிகாரம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.