தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்


தீபாவளி பண்டிகை இன்று கொண்டாட்டம்: பஸ்-ரெயில் நிலையங்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2017 4:15 AM IST (Updated: 18 Oct 2017 3:36 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதையொட்டி சேலம் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

சேலம்,

தீபாவளி பண்டிகை இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சேலத்தில் வசிக்கும் வெளியூர்களை சேர்ந்தவர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றனர். மேலும், பொதுமக்கள் வசதிக்காக சேலத்தில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள், சேலம் புதிய பஸ்நிலையம் மற்றும் 3 ரோடு அருகேயுள்ள ஜவகர் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. நேற்று பிற்பகல் முதல் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக புதிய பஸ் நிலையம், 5 ரோடு, 4 ரோடு, சாரதா கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. ஒவ்வொரு வாகனங்களும் நீண்ட நேரத்திற்கு பிறகு மெதுவாக ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது. காலை முதல் இரவு வரையிலும் சேலம் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இதேபோல், சேலம் வழியாக வெளியூர்களுக்கு சென்ற ரெயில்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதாவது தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் பெரும்பாலானவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக ரெயிலில் முன்பதிவு செய்வார்கள்.

அதன்படி, நேற்று சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வழியாக சென்ற சென்னை-கோவை எக்ஸ்பிரஸ், சென்னை சென்டிரல்- மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில், காரைக்கால்-பெங்களூரு பயணிகள் ரெயில், சேலம்-கோவை பயணிகள் ரெயில் உள்ளிட்ட அனைத்து ரெயில்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று காலை முதல் இரவு வரையிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் படிக்கட்டில் தொங்கியபடி பயணிகள் பயணம் செய்ததை காண முடிந்தது. 

Related Tags :
Next Story