விதான சவுதா வைர விழா கொண்டாட்டத்திற்கு ரூ.26 கோடி வழங்க சித்தராமையா மறுப்பு


விதான சவுதா வைர விழா கொண்டாட்டத்திற்கு ரூ.26 கோடி வழங்க சித்தராமையா மறுப்பு
x
தினத்தந்தி 18 Oct 2017 5:00 AM IST (Updated: 18 Oct 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

விதான சவுதா வைர விழா கொண்டாட்டத்திற்கு ரூ.26 கோடி வழங்க சித்தராமையா மறுத்துவிட்டார். ரூ.10 கோடிக்குள் விழா செலவுகளை முடிக்கும்படி அவர் அறிவுறுத்தினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் விதான சவுதா கட்டிடம் உள்ளது. மாநில அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வரும் அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் ஆவதையொட்டி வைர விழாவை கொண்டாட சபாநாயகர் கே.பி.கோலிவாட், மேல்–சபை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். வருகிற 25, 26–ந் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. 25–ந் தேதி சட்டசபையின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். ரூ.26 கோடி செலவில் விழாவை மிக ஆடம்பரமாக நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்களுக்கு நினைவு பரிசாக தலா ரூ.50 ஆயிரம் மதிப்பில் தங்க நாணயமும், விதான சவுதாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெள்ளி தட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இது தவிர விதான சவுதா பற்றி அதிக செலவில் ஆவண படம், அறுசுவை உணவு என அனைத்தும் தயார் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.

இதற்கு மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 2 நாட்கள் விழாவுக்கு ரூ.26 கோடி செலவு செய்வதா? என்று ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தினர். இந்த விழாவை சபாநாயகர் மற்றும் மேல்–சபை தலைவர் ஆகியோர் மட்டுமே தலைமை ஏற்று நடத்த முடிவு செய்துள்ளனர். இதில் மாநில அரசை குறிப்பாக மந்திரிகளை சேர்க்கவில்லை. இதனால் மந்திரிகள் சிலர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக இந்த வைர விழா கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்–மந்திரி சித்தராமையாவை சபாநாயகர் கே.பி.கோலிவாட், மேல்–சபை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் நேற்று பெங்களூருவில் நேரில் சந்தித்து பேசினர். அப்போது விதான சவுதா வைர விழா கொண்டாட்டத்தை நடத்த நிதி வழங்குமாறு கூறி ஒரு வரைவு அறிக்கையை சித்தராமையாவிடம் அவர்கள் தாக்கல் செய்தனர். அவர்கள் ரூ.26 கோடி நிதியை ஒதுக்குமாறு கேட்டனர்

மாநிலத்தில் மழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் வைர விழாவுக்கு ரூ.26 கோடியை ஒதுக்க சாத்தியம் இல்லை என்று கூறி சித்தராமையா அதை ஏற்க மறுத்துவிட்டார். மேலும் எம்.எல்.ஏ.க்களுக்கு விலை உயர்ந்த நினைவு பரிசு வழங்க வேண்டாம் என்றும் அவர் கூறினார். வைர விழா கொண்டாட்ட செலவுகளை ரூ.10 கோடிக்குள் ஒரு நாளில் முடித்துக்கொள்ளும்படியும் சித்தராமையா அறிவுறுத்தினார்.

சித்தராமையாவை சந்தித்த பிறகு சபாநாயகர் கே.பி.கோலிவாட் நிருபர்களிடம் கூறுகையில், “வைர விழா கொண்டாட்டத்திற்கு நிதி ஒதுக்குமாறு முதல்–மந்திரியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். அவர் நிதியை ஒதுக்கி கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அரசு ஒதுக்கும் நிதியை கொண்டு விழாவை சிறப்பாக நடத்துவோம்“ என்றார்.


Next Story