புதுச்சேரியில் பஸ் கட்டணம் திடீர் உயர்வு குளிர்சாதன, இரவுநேர பஸ்களுக்கு இருமடங்கு அதிகம்


புதுச்சேரியில் பஸ் கட்டணம் திடீர் உயர்வு குளிர்சாதன, இரவுநேர பஸ்களுக்கு இருமடங்கு அதிகம்
x
தினத்தந்தி 18 Oct 2017 5:00 AM IST (Updated: 18 Oct 2017 4:28 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி தினத்தில் புதுச்சேரியில் அதிரடியாக பஸ் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. குளிர்சாதன, இரவுநேர பஸ்களுக்கான கட்டணம் இருமடங்கு உயர்ந்துள்ளது.

புதுச்சேரி,

கடந்த 2012-ம் ஆண்டுக்குப் பிறகு பஸ் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் வாகன எரிபொருள், உதிரி பாகங்கள், டயர், வாகன காப்பீட்டு கட்டணம், பஸ் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழிலாளர்களுக்கான சம்பளம் போன்றவை பெருமளவில் உயர்ந்துள்ளதால் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று புதுவை தனியார் பஸ் உரிமையாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் பஸ் கட்டணத்தை அரசு திடீரென உயர்த்தி அறிவித்து உள்ளது.
அது தொடர்பாக புதுவை போக்குவரத்து ஆணையர் சுந்தரேசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதிய பஸ் கட்டணங்களை நிர்ணயம் செய்து புதுவை அரசு போக்குவரத்து துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு புதுச்சேரி ஆட்சிப்பரப்பில் இயக்கப்படும் பஸ் கட்டணமானது அரசின் ஆணைப்படி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி பல்நோக்கு போக்குவரத்து குழுமத்தின் புதுச்சேரிக்கான வழிகாட்டு நெறியான விரிவான போக்குவரத்து திட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி அரசு போக்குவரத்து துறை பஸ் கட்டணத்தை மறுநிர்ணயம் செய்துள்ளது. அதில் பஸ் இயக்கத்தின் பல்வேறு கூறுகள் மற்றும் காரணங்களை கணக்கில்கொண்டு பஸ் கட்டணம் கணக்கிடப்பட்டுள்ளது.

புதுவை யூனியன் பிரதேசத்திற்குள் இயக்கப்படும் நகர சேவை பஸ்களுக்கு (டவுண் பஸ்கள்) முதல் நிலைக்கு ரூ.5 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொரு நிலைக்கும் ரூ.2 கட்டண உயர்வாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒருநிலை என்பது 3 கிலோமீட்டர் தூரம் ஆகும்.

புதுவை யூனியன் பிரதேசத்திற்குள் இயக்கப்படும் புறநகர் பஸ்களுக்கு முதல் 6 கி.மீ. வரையில் உள்ள தூரத்திற்கு ரூ.8 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 75 காசு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விரைவு பஸ்களுக்கு முதல் 2 கி.மீ. வரை உள்ள தூரத்திற்கு ரூ.25 எனவும் அதன்பின் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 90 காசு எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுள்ள பஸ்களுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டு புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது சாதாரண பஸ்சில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட இரு மடங்கு அதிகமாகும்.

நகரப்பகுதிகளில் இரவு நேர பஸ் சேவைக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நகர பஸ்களில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். அத்துடன் அரசு நிர்ணயிக்கும் ஜி.எஸ்.டி. கட்டணமும் பஸ்களில் வசூலிக்கப்படும். புதுவை ஒன்றிய ஆட்சிபரப்பில் அல்லாது மற்ற மாநில சாலைகளில் பஸ்கள் இயக்கப்படும்போது அத்தகைய தூரத்திற்கு அந்த மாநிலம் நிர்ணயம் செய்துள்ள பஸ்கட்டணமே வசூல் செய்தல் வேண்டும்.

புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பஸ் கட்டணம் புதுவை அரசின் ஒப்புதலுடன் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பஸ் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கட்டணத்தை செலுத்தி பஸ்களில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு உடனடியாக கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ள நிலையில் நாளை (வியாழக்கிழமை) முதல் கட்டண உயர்வினை அமல்படுத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Next Story