ஆலங்குளம் அருகே பெண் அடித்துக் கொலை தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு


ஆலங்குளம் அருகே பெண் அடித்துக் கொலை தொழிலாளிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Oct 2017 2:00 AM IST (Updated: 19 Oct 2017 8:47 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளம் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

ஆலங்குளம்,

ஆலங்குளம் அருகே பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கணக்காளர்

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள வல்லவன்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி குழந்தை திரவியத்து அம்மாள் (வயது 40). இவர் தேசிய ஊரக பணித்திட்டத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். பெருமாள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இதையடுத்து குழந்தை திரவியத்து அம்மாளுக்கும், அதே பகுதி நடுத்தெருவைச் சேர்ந்த தொழிலாளியான சுப்பிரமணியனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கத்தை வைத்துக் கொண்டு சுப்பிரமணியன், குழந்தை திரவியத்து அம்மாளிடம் அடிக்கடி பணம் கேட்டு வந்தார். அவர் கேட்கும் போதெல்லாம் குழந்தை திரவியத்து அம்மாள் பணம் கொடுத்து வந்தார்.

அடித்துக் கொலை

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கொடுத்த பணத்தை எல்லாம் திருப்பி தரும்படி சுப்பிரமணியனிடம், குழந்தை திரவியத்து அம்மாள் கேட்டுள்ளார். ஆனால் பணம் கொடுக்காமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காலையில் சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்ற குழந்தை திரவியத்து அம்மாள் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் குழந்தை திரவியத்து அம்மாளை சரமாரியாக தாக்கி விட்டு, அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை திரவியத்து அம்மாள் பரிதாபமாக இறந்தார்.

வலைவீச்சு

இதுகுறித்து சீதபற்பநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியனை வலைவீசி தேடிவருகிறார்கள். ஆலங்குளம் அருகே இரும்பு கம்பியால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story