நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 20 Oct 2017 2:15 AM IST (Updated: 19 Oct 2017 8:59 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

நடமாடும் மருத்துவமனை

நெல்லை சுகாதார மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் 2 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ‘ஏடிஸ்‘ கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு வட்டார பகுதியிலும் மாவட்ட வருவாய் அலுவலர், உதவி கலெக்டர்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு டெங்கு நோய் தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் கிடக்கும் டயர், சிரட்டை, ஆட்டுக்கல், உடைந்த பானை, நீர் தேக்கமுள்ள பொருட்களை அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட இடங்களில் நடமாடும் மருத்துவமனை மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நவீன எந்திரங்கள் மூலம் டெங்கு நோய் கண்டறியப்பட்டு போதுமான சிகிச்சை அளிப்பதுடன், தேவை ஏற்படின் அவர்களை சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வாகன வசதியும் செய்யப்படுகிறது.

நடவடிக்கை

அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச்சல் சிகிச்சைக்கு தேவையான மருந்து மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. டெங்கு பாதிப்பு பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் மூலம் போர்க்கால அடிப்படையில் டெங்கு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் கொசு ஒழிப்பு பணி மற்றும் டெங்கு தடுப்பு பணிக்காக வரும் பணியாளர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் குடியிருப்பு, கட்டிட வளாகங்களில் கொசுப்புழு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கோர்ட்டு மூலம் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Next Story