சென்னையில் 80 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் கடந்த ஆண்டை காட்டிலும் 12 டன் அதிகரிப்பு


சென்னையில் 80 டன் பட்டாசு குப்பைகள் அகற்றம் கடந்த ஆண்டை காட்டிலும் 12 டன் அதிகரிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2017 7:00 AM IST (Updated: 20 Oct 2017 1:25 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளியையொட்டி சென்னையில் 80 டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகையின்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம் இன்றி பட்டாசுகள் வெடித்து குதூகலிப்பது வழக்கம். பட்டாசுகள் வெடிக்கும்போது, அதில் உள்ள காகிதங்கள் குப்பைகளாக சிதறும். தெருக்கள், சாலைகளில் பட்டாசு குப்பைகள் குவியல் போன்று காட்சி அளிக்கும். அதன்படி சென்னையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 80 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் 5 ஆயிரத்து 300 டன் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இதற்காக பெருநகர சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் என மொத்தம் 19 ஆயிரம் பேர் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை ஒட்டி 80 டன் பட்டாசுக் கழிவுகள் மற்றும் குப்பைக் கழிவுகள் அகற்றப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுரையின்படி, கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள அபாயகரமான கழிவுகளை சேகரிக்கக்கூடிய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆயுத பூஜை பண்டிகையின் போது கூடுதலாக 420 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது 68 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக 12 டன் குப்பைகள் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story