திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
மணல் கடத்தலை தடுத்து நிறுத்தக்கோரி திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான அரண்வாயல்குப்பம், முருகஞ்சேரி போன்ற பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வக்கீல்கள் அணி நிர்வாகி பாலசுப்பிரமணியன் தலைமையில் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நாங்கள் அரண்வாயல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிரந்தரமாக வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் தினந்தோறும் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் என 30–க்கும் மேற்பட்ட வாகனங்களில் மணல் கடத்தல் நடந்து வருகிறது. தொடர்ந்து மணல் கடத்தல் நடந்து வருவதால் ஆற்றில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் எங்களுக்கு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் அபாயமும், விவசாயம் செய்யமுடியாத நிலையும் உள்ளது.
இது குறித்து நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது நாள்வரை அவர்கள் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அரண்வாயல் கூவம் ஆற்றில் மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை கலெக்டர் சுந்தரவல்லியிடம் அளித்தனர். மனுவை பெற்றுகொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.