உழவர்கரை நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நாளை நடக்கிறது
புதுவை லாஸ்பேட்டை, காலாப்பட்டு மற்றும் காமராஜர் நகர் தொகுதிகளில் உழவர்கரை நகராட்சி சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நாளை(சனிக்கிழமை) நடக்கிறது.
புதுச்சேரி,
புதுவை மாநிலத்தில் டெங்கு காய்ச்சலால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் குணமாகி வீடு திரும்பினர். பலர் சிலர் இன்னும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். டெங்கு காய்ச்சலை தடுக்க அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கவர்னர் கிரண்பெடியும் தினமும் ஆய்வுகள் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுதவிர கொசு மருந்து தெளிப்பது, தண்ணீரை தேங்க விடாமல் செய்வது போன்ற பணிகளில் உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் புதுவையில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 4 பேர் பலியாகி உள்ளனர். காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க அரசு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதற்கிடையே மத்திய குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசிடம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் உழவர்கரை நகராட்சி சார்பில் நாளை(சனிக்கிழமை) லாஸ்பேட்டை பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை குறிஞ்சி நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
டெங்கு காய்ச்சலை ஒழிக்க அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாளை(சனிக்கிழமை) லாஸ்பேட்டை, காலாப்பட்டு, காமராஜர் நகர் தொகுதிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இதில் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், பைலேரியா பிரிவு ஊழியர்கள், என்.எஸ்.எஸ். மாணவர்கள் கொண்ட 700 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் ஒவ்வொரு வீடாக சென்று அங்கு உள்ள மக்களை சந்தித்து டெங்கு கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினர். துண்டு பிரசுரங்கள் வழங்குவார்கள். மேலும் வீட்டில் உள்ளவர்களின் அனுமதியோடு வீட்டை சுற்றி பார்ப்பார்கள். அப்போது வீட்டில் எங்காவது தங்கி தேங்கி இருந்தால் அவற்றை அகற்றுவார்கள். மேலும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்.
கூட்டத்தில் உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த குடியிருப்பு நலவாழ்வு சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.