தியேட்டர் ஊழியர் அடித்துக்கொலை 8 பேர் கைது


தியேட்டர் ஊழியர் அடித்துக்கொலை 8 பேர் கைது
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:19 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் தியேட்டர் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ஜார்ஜ். இவருடைய மகன் கெவின் விக்னேஷ் (வயது 22). இவர், மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தியேட்டரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய நண்பர் ஆனஸ்ட்ராஜ்(27). இவருக்கும், எடமலைப்பட்டிபுதூர் ஆர்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த சக்திக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அங்குள்ள முத்துமாரியம்மன் கோவில் அருகே தகராறு நடந்தது. இதுபற்றி ஆனஸ்ட்ராஜ் தனது நண்பரான கெவின் விக்னேஷிடம் கூறி உள்ளார்.

உடனே, கெவின்விக்னேஷ் நேற்று முன்தினம் செட்டியாப்பட்டி பகுதிக்கு தனியாக சென்று அங்கு சக்தியின் சகோதரரான சிவசந்துரு மற்றும் அவரது நண்பர்களான வல்லரசு, சுதாகர், ரஞ்சித், பாலமுருகன், சுரேஷ் உள்ளிட்டோரிடம் தட்டி கேட்டுள்ளார். அப்போது அவர் களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த கெவின் விக்னேஷ் தன்னிடம் இருந்த கத்தியால் சிவசந்துருவையும், வல்லரசுவையும் சரமாரியாக குத்தினார். இதில் அவர்கள் 2 பேரும் காயம் அடைந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அருகே கிடந்த உருட்டு கட்டையை எடுத்து கெவின் விக்னேஷை தாக்கினர். உடனே அவர் அங்கிருந்து தப்பித்து ஓடினார். அவர்கள் விடாமல் விரட்டி சென்று அவரை மார்பு, தலை, கைகளில் சராமரியாக தாக்கினர். இதில் கெவின்விக்னேஷ் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். படுகாயத்துடன் கிடந்த கெவின் விக்னேஷை அந்த பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக வல்லரசு, சிவசந்துரு, சக்தி ஆகிய 3 பேரையும், மற்றொரு தரப்பில் ஆனஸ்ட்ராஜ், அவரது நண்பர்களான அந்தோணி என்கிற சதீஷ், அப்துல்ரகீம், கவுதம் சக்ரவர்த்தி உள்பட 5 பேரையும் சேர்த்து 8 பேரை கைது செய்தனர். இவர்களில் வல்லரசும், சிவசந்துருவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story