மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் செல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல்


மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் செல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:22 AM IST)
t-max-icont-min-icon

மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் செல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர். மேலும் அவர்கள் காவேரிப்பாக்கம் ஏரியின் மதகுகளை மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனப்பாக்கம்,

வேலூர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியாக 3,968 ஏக்கர் பரப்பளவு கொண்ட காவேரிப்பாக்கம் ஏரி திகழ்கிறது. தொடர் மழை காரணமாக காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பியது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி காவேரிப்பாக்கம் ஏரியில் இருந்து மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் செல்ல பொன்னப்பந்தாங்கல் கிராமம் பகுதியில் உள்ள 9 மதகுகள் திறக்கப்பட்டது.

இந்த மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேறி மகேந்திரவாடிக்கு கால்வாய் மூலம் செல்கிறது. அவ்வாறு செல்லும் வழியில் கோவிந்தசேரி ஏரி, மங்கலம் ஏரி, கீழ்வீராணம் ஏரி ஆகிய 3 ஏரிகள் உள்ளது. இந்த ஏரிகள் நிரம்பிய பின்னரே மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் செல்லும். கால்வாய் தூர்வாரப்படாததால் தண்ணீர் குறைந்த அளவே சென்றது.

இந்த நிலையில் அன்று மாலையே காவேரிப்பாக்கம் ஏரியில் 58 மதகுகள் திறக்கப்பட்டது. இதனால் வினாடிக்கு 1500 கனஅடி நீர் வெளியேறி 55 ஏரிகளுக்கு தண்ணீர் சென்றது.

ஆனால் மகேந்திரவாடி ஏரிக்கு தண்ணீர் செல்லவில்லை. மகேந்திரவாடி ஏரி நிரம்பும் என்று ஆவலில் இருந்த அப்பகுதி பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சுமார் 300 பேர் நேற்று டிராக்டரில் காவேரிப்பாக்கம் ஏரிக்கு வந்தனர். அங்கு மேம்பாலத்தில் அமர்ந்து மதகுகளை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் காவேரிப்பாக்கம் - சோளிங்கர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திலிங்கம், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் திலகம் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பொதுமக்கள் திடீரென ஆவேசமாக எழுந்து காவேரிப்பாக்கம் ஏரிக்கு சென்று 58 மதகுகளையும் மூடினர். இதனால் பாய்ந்தோடிய தண்ணீர் தடைபட்டது. காவேரிப்பாக்கம் ஏரியின் மதகுகளை பொதுமக்கள் மூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மகேந்திரவாடி கிராமமக்கள் வீட்டிற்கு சென்றனர். கிராமமக்கள் மதகுகளை அடைத்த சம்பவத்தை அடுத்து அதிகாரிகள் காவேரிப்பாக்கம் ஏரிக்கு சென்று மாலை 4 மணி அளவில் மதகுகளை திறந்தனர். அதிகாரிகள் மதகுகளை திறந்த தகவல் அறிந்த மகேந்திரவாடி மக்கள் கிராமத்திலேயே சாலை மறியல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பாணாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story