நிலவேம்பு கசாயம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்


நிலவேம்பு கசாயம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:30 AM IST (Updated: 20 Oct 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

நிலவேம்பு கசாயம் குறித்து சமூகவலைதளங்களில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று தஞ்சை மருத்துவமனையில் ஆய்வுசெய்த அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பரவி வரும் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் காய்ச்சல் மற்றும் டெங்குகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுபவர்களை பார்த்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர்ந்து அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பொதுமக்களிடமும் இது தொடர்பாக நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. தஞ்சை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. இன்னும் 10, 15 நாட்களில் டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும்.

காய்ச்சல் வந்தால் உடனடியாக பொதுமக்கள் அருகில் உள்ள ஆரம்பசுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் உள்ளன. போதிய டாக்டர்கள், செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 140 பேருக்கும் 100 சதவீதம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவையான ரத்தம், மருந்துகளும் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் அரசு மருத்துவமனைகளுக்கு வருபவர்களுக்கு தேவையான, திருப்தியான சிகிச்சை அளிக்கப்படுகிறது.

டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 1,113 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 744 டாக்டர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறலாம். காய்ச்சல் வந்தால் தனியார் மருத்துவமனைக்கு சென்று 2 அல்லது 3 நாட்கள் சிகிச்சை பெற்று பின்னர் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆரம்ப கட்டத்திலேயே அவர்கள் அரசு மருத்துவமனைக்கு வந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

நிலவேம்பு கசாயம் பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக இது வழங்கப்படுகிறது. இதனால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. எனவே நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story