கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் ‘மெர்சல்’ படத்தை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம்


கர்நாடகாவில் உள்ள தியேட்டர்களில் ‘மெர்சல்’ படத்தை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2017 4:45 AM IST (Updated: 20 Oct 2017 4:40 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் ‘மெர்சல்’ படத்தை எதிர்த்து கன்னட அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தியேட்டர்களில் ரசிகர்கள் வைத்து இருந்த விஜய்யின் கட் அவுட்களையும் அடித்து நொறுக்கினார்கள்.

பெங்களூரு,

விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கர்நாடகாவிலும் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் அதிகமான தியேட்டர்களில் மெர்சல் திரையிடப்பட்டு அங்குள்ள ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வந்து படம் பார்த்தார்கள்.

மெர்சல் படம் ஓடிய திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்யின் கட் அவுட்டுகளை அமைத்து இருந்தனர். கொடி தோரணங்களும் கட்டி இருந்தார்கள். இந்த நிலையில் பெங்களூரு மல்லேசுவரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் கன்னட அமைப்பை சேர்ந்த சிலர் திரண்டு வந்து மெர்சல் படத்தை திரையிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ரகளையில் ஈடுபட்டனர். படம் பார்க்க வந்த விஜய் ரசிகர்களை தாக்கினார்கள்.

தியேட்டரில் வைக்கப்பட்டு இருந்த விஜய் கட் அவுட்களையும் அடித்து நொறுக்கினார்கள். மெர்சல் படம் ஓடிய சம்பிகே தியேட்டர் எதிரில் கன்னட திரைப்பட வர்த்தக சபை தலைவர் கோவிந்து தலைமையில் போராட்டம் நடந்தது. இவர் ராஜ்குமார் ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைசூருவிலும் கன்னட அமைப்பினர் மெர்சல் படம் ஓடிய தியேட்டர்களில் போராட்டத்தில் ஈடுபட்டு படத்தை தடுத்து நிறுத்தினார்கள். இதைத்தொடர்ந்து மைசூருவில் மெர்சல் படம் ஓடிய தியேட்டர்கள் முன்னால் போலீசார் குவிக்கப்பட்டனர். பெங்களூரு நகரில் மெர்சல் படம் திரையிடப்பட்ட பொம்மனஹள்ளி ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட சில தியேட்டர்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர்.

கர்நாடகாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட நடிகர்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. கன்னடர்களும் திரளாக வந்து இவர்களின் படங்களை பார்க்கிறார்கள். மெர்சல் படமும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் இடம்பெற்று உள்ளது. தமிழர்களின் பெருமை பேசும் காட்சிகளும் உள்ளன.
இதனால் கன்னட அமைப்பினர் கோபத்தில் மெர்சல் படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Next Story