காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்று துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
ஆலோசனை கூட்டம்தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது;–
தடுப்பு நடவடிக்கைகள்தூத்துக்குடி மாவட்டத்தில், சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை துறை அலுவலர்கள் தீவிர கள ஆய்வு மற்றும் தொடர் தணிக்கை செய்து, தங்கள் பகுதிகளில் காய்ச்சல் மற்றும் டெங்கு போன்ற நோய்கள் வராமல் தவிர்க்க துரிதமாக செயல்பட வேண்டும். மாவட்டத்தில், ஏதேனும் ஒரு கிராமத்தில் 3 நபர்களுக்கு மேல் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அல்லது 10 நபர்களுக்கு மேல் வைரஸ் காய்ச்சல் இருந்தால் அந்த கிராமத்தை அல்லது வார்டை டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து துறை சார்ந்த அலுவலர்கள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்திட வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் குடிநீரில் குளோரின் அளவை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை, மாநகராட்சி, நகரசபை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும். தன்னார்வ தொண்டர்கள், சுயஉதவிக்குழுக்கள், தேசிய மாணவர் படையினர் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில், உதவி கலெக்டர் பிரசாந்த், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிச்சை, சுகாதார பணிகள் துணை இயக்குனர்கள் கீதாராணி, போஸ்கோ ராஜா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஜார்ஜ் மைக்கேல் ஆண்டனி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.