பழங்கால கல் செக்குகளை லாரியில் கடத்த முயற்சி: 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை


பழங்கால கல் செக்குகளை லாரியில் கடத்த முயற்சி: 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Oct 2017 2:30 AM IST (Updated: 20 Oct 2017 8:41 PM IST)
t-max-icont-min-icon

அம்பையில் இருந்து கேரளாவுக்கு பழங்கால கல் செக்குகளை லாரியில் கடத்த முயன்றது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையம்,

அம்பையில் இருந்து கேரளாவுக்கு பழங்கால கல் செக்குகளை லாரியில் கடத்த முயன்றது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல் செக்குகள் கடத்தல்

அம்பை அருகே உள்ள வாகைக்குளம், மன்னார்கோவில், திருவாலீஸ்வரம் ஆகிய ஊர்கள் இந்திய தொல்பொருள் துறையின் மேற்பார்வையில் உள்ளன. இங்கு பாண்டிய மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் செக்குகள், அம்மிகள் உள்ளிட்ட பழங்கால பொருட்கள் ஏராளமாக உள்ளன.

நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாகைக்குளத்தில் இருந்து ஒரு லாரியில் கேரளா மாநிலம் பாலக்காட்டிற்கு 7 கல் செக்குகளை சிலர் கடத்தி சென்று கொண்டிருந்தனர். லாரியை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சக்திவேல் (வயது 31) என்பவர் ஓட்டினார்.

போலீசார் விரைந்தனர்

லாரியில் ஏற்றப்பட்ட கல் செக்குகள் கயிறு வைத்து கட்டப்படவில்லை. மேலும் லாரி செல்லும்போது கல் செக்குகள் நகராமல் இருக்க தடுப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை. இதனால் அந்த கல்செக்குகள் ரோட்டில் விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று கருதி அப்பகுதி மக்கள் லாரியை வழிமறித்தனர். அவர்களுடன் டிரைவர் சக்திவேல் வாக்குவாதம் செய்தார். இதுகுறித்து உடனடியாக கடையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ஸ்கேவான்சேகர், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் டிரைவர் சக்திவேல், மன்னார்புரத்தில் சரக்கு இறக்க வந்ததாகவும், அப்போது விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள லாரி புரோக்கர் அலுவலகத்தில் இருந்து போனில் கல்செக்குகளை லாரியில் பாலக்காட்டிற்கு கொண்டு செல்லும்படி கூறியதாகவும் தெரிவித்தார். மேலும் லாரியின் உரிமையாளர் பாலக்காட்டை சேர்ந்த குட்டப்பன் என்றும் கூறினார்.

5 பேரிடம் விசாரணை

அந்த கல் செக்குகள் ஒவ்வொன்றும் 9 அடி உயரம் கொண்டதாக இருந்தது. அவற்றுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. வாகைகுளத்தை சேர்ந்த சுந்தர செட்டியார் மகன் நாராயணன் என்பருக்கு சொந்தமான 7 கல் செக்குகளை தலா ரூ.1000 கொடுத்து பெற்றது தெரியவந்தது. அவற்றை பாளையங்கோட்டையை சேர்ந்த ராமசந்திரன் மகன் பாபு (43), அடைச்சாணியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மாரியப்பன் (39), வாகைகுளத்தை சேர்ந்த முருகன் ஆகிய 3 புரோக்கர்கள் மூலம் விலைக்கு பெற்று பாலக்காடு கீர்த்திநகரை சேர்ந்த மணியப்பர் மகன் சாமிநாதன் என்பவருக்கு சொந்தமான மன்னடியார் கைவினை பொருட்கள் நிறுவனத்துக்கு கொண்டு செல்வது தெரியவந்து.

இதையடுத்து டிரைவர் சக்திவேல், புரோக்கர்கள் பாபு, மாரியப்பன், முருகன் மற்றும் சாமிநாதன் ஆகிய 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

இதற்கிடையே, சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு உதயகுமார், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மதிவாணன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு நெல்லை இன்ஸ்பெக்டர்கள் கிங்ஸ்லி தேவானந்தம், கனகராஜ் ஆகியோர் விசாரனை நடத்தி வருகின்றனர். மேலும் தொல்லியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் தான் இதுகுறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் கடையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story