புதியம்புத்தூர் அருகே பாத்திர வியாபாரி வெட்டி கொலை தொழிலாளி கைது


புதியம்புத்தூர் அருகே பாத்திர வியாபாரி வெட்டி கொலை தொழிலாளி கைது
x
தினத்தந்தி 21 Oct 2017 2:15 AM IST (Updated: 20 Oct 2017 9:04 PM IST)
t-max-icont-min-icon

புதியம்புத்தூர் அருகே பாத்திர வியாபாரி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

ஓட்டப்பிடாரம்,

புதியம்புத்தூர் அருகே பாத்திர வியாபாரி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாத்திர வியாபாரி

ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் கணேசன் (வயது 48). இவர் கோவையில் பாத்திர வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஈசுவரி (43) என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் மாரிமுத்து (24). கூலி தொழிலாளி. இவர் கணேசனின் மகளை அடிக்கடி கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பல முறை கணேசன் கண்டித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கணேசன் கோவையில் இருந்து நடுவக்குறிச்சிக்கு வந்தார். இந்த நிலையில் மாரிமுத்து மீண்டும் அவருடைய மகளை கிண்டல் செய்தாராம்.

வெட்டிக்கொலை

இதனை அறிந்த அவர் நேற்று மதியம் தனது வீட்டுக்கு முன் வந்த மாரிமுத்துவை கண்டித்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, ஆத்திரம் அடைந்த மாரிமுத்து தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து, கணேசனை சரமாரியாக வெட்டினார். இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தொழிலாளி கைது

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் புதியம்புத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரிஹரன், சப்–இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர், அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஓட்டப்பிடாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து புதியம்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story