தாம்பரம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி
தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் அருணா. பூ வியாபாரி.
தாம்பரம்,
இவருடைய மகள் சந்தியா(வயது 7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வந்தாள்.
சந்தியா கடந்த 15 நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தாள். இதற்காக அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குறையவில்லை. இதையடுத்து கடந்த 17–ந்தேதி சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், சந்தியாவுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சந்தியா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இதேபோல், மதுரை மாவட்டம் சோழவந்தானை அடுத்த கொசவபட்டியைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்ட பொறுப்பாளர் அருள்பிரகாசம் (38), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே புனுகன்தொட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அம்ரீஷ் (20), நாமக்கல் மாவட்டம் ஈஸ்வரமூர்த்திபாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது 8 மாத ஆண் குழந்தை அஜய், விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே ஈராடியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (42), ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த 2–ம் வகுப்பு மாணவி தர்ஷனி (7) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள தொப்பம்பட்டியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி சாரதா (26) என்பவரும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.