டெங்கு காய்ச்சல் எதிரொலி: வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு


டெங்கு காய்ச்சல் எதிரொலி: வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Oct 2017 11:00 PM GMT (Updated: 2017-10-21T03:03:42+05:30)

டெங்கு காய்ச்சல் எதிரொலியாக வீடு, வீடாக சென்று மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் ஆய்வு செய்தார்.

பழனி,

பழனி பகுதிகளில் டெங்கு மற்றும் மர்மக்காய்ச்சலால் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 23-க்கும் மேற்பட்டவர்கள் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இதுதவிர மேலும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாளுக்கு நாள் காய்ச்சலால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாகவே மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் இருப்பது, மாசு கலந்த குடிநீர் வினியோகம் செய்வது உள்ளிட்ட காரணங்களால் மர்மக்காய்ச்சல் பரவி வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் சுகாதார இணை இயக்குனர் மற்றும் சுகாதார பணியாளார்கள் தொடர்ந்து டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் பழனிக்கு வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் சென்று அடிவாரம், பூங்காரோடு, குரும்பபட்டி, புதுதாராபுரம் ரோடு, சத்யாநகர், குபேரபட்டினம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தார். வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா? என ஆய்வு செய்தார்.

மேலும் பொதுமக்களிடம் காய்ச்சல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அதுமட்டுமின்றி சாக்கடை கால்வாய்களை தூர்வாரி பிளிச்சிங் பவுடர் தூவ உத்தரவிட்டார். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, சப்-கலெக்டர் அருண்ராஜ், பழனி நகராட்சி ஆணையர் ஜோதிகுமார், பொது சுகாதார துணை இயக்குனர் வரதராஜன், பழனி நகர்நல அதிகாரி விஜய்சந்திரன், தாசில்தார் ராஜேந்திரன் மற்றும் சுகாதார அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர் கலெக்டர் டி.ஜி.வினய் பழனி-திண்டுக்கல் ரோட்டில் அரசு மருந்துகுடோன் அமைப்பதற்கான இடத்தினை பார்வையிட்டார். 

Related Tags :
Next Story