பாரதீய ஜனதா முன்னாள் மாநில தலைவர் எஸ்.பி. கிருபாநிதி உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி


பாரதீய ஜனதா முன்னாள் மாநில தலைவர் எஸ்.பி. கிருபாநிதி உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி
x
தினத்தந்தி 21 Oct 2017 5:05 AM IST (Updated: 21 Oct 2017 5:05 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மரணம் அடைந்த பாரதீய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி உடலுக்கு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

கடலூர்,

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி (வயது 90). கடலூர் பீச்ரோட்டில் உள்ள கே.டி.ஆர்.நகரில் வசித்து வந்த இவர் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய வீட்டு முன்பு வைக்கப்பட்டு இருந்தது.அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடலூர் வந்தார். தொடர்ந்து அவர் மறைந்த டாக்டர் எஸ்.பி. கிருபாநிதி வீட்டுக்கு சென்று, அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மாவட்ட தலைவர் சரவண சுந்தரம், மாநில நிர்வாகி ராஜ ரத்தினம், மாவட்ட பொதுச்செயலாளர் குணா என்கிற குணசேகரன், நகர தலைவர் வெங்கடேசன் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோல் அ.தி.மு.க. (அம்மா- புரட்சி தலைவி அம்மா) சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத், அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன் உள்பட கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், புதுச்சேரி வர்த்தகர் அணி அமைப்பாளர் சக்திவேல், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் முருகையன், ஏம்பல் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன், தேர்தல் பிரிவு செயலாளர் இள.புகழேந்தி உள்பட தி.மு.க.வினர் அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி மலர் வளையம் வைத்து கிருபாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் கடலூர் அரசு மருத்துவமனை நலப்பணிகள் இணை இயக்குனர் மாதவி, கண்காணிப்பாளர் ஹபிசா, குழந்தைகள் நல பிரிவு டாக்டர் குமார் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், குடும்ப நண்பர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினார்கள். அதையடுத்து காலை 11 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கம்மியம்பேட்டை சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

Next Story