நுகரும் திறனை இழந்தால் ஞாபகமறதி அபாயம்


நுகரும் திறனை இழந்தால் ஞாபகமறதி அபாயம்
x
தினத்தந்தி 21 Oct 2017 10:55 AM IST (Updated: 21 Oct 2017 10:54 AM IST)
t-max-icont-min-icon

மணத்தை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலுவான அறிகுறி.

நுகரும் திறனை இழப்பது ‘டிமென்சியா’ எனப்படும் ஞாபகமறதி நோய்க்கான ஆரம்பகட்ட அறிகுறி என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் நடத்திய இந்த நீண்டகால ஆய்வில் சுமார் மூவாயிரம் பேர் பங்கேற்றனர்.

புதினா, மீன், ஆரஞ்சு, ரோஜா, பதனிடப்பட்ட தோல் ஆகியவற்றின் மணங்களை உணர முடியாதவர்களுக்கு, அவற்றின் மணங்களை உணர முடிந்தவர்களைவிட, அடுத்த ஐந்து ஆண்டுகளில் டிமென்சியா நோய் வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம் என்று அந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேற்கண்ட பொருட்களில் ஒன்று அல்லது இரண்டின் மணத்தை மட்டுமே நுகர்ந்து உணர முடிந்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு அந்நோய் இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர்.

மணத்தை நுகரும் உணர்வை இழப்பது என்பது எங்கோ தவறு நிகழ்கிறது என்பதற்கான வலுவான அறிகுறி என்று அந்த ஆராய்ச்சிக் குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.

இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள அல்சைமர் சொசைட்டியின் தலைவரான மருத்துவர் ஜேம்ஸ் பிக்கெட், ‘‘ஆரம்பகட்டத்தில் டிமென்சியா மனிதர்களின் நுகரும் திறனைப் பாதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு கூடுதல் ஆதாரமாக இருந்தாலும், இந்த ஆய்வுகள் இன்னும் துல்லியமானவையாக இருக்க வேண்டும்’’ என்கிறார்.

ஆக, தற்போதைய ஆய்வு முடிவுகள் தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று புரிகிறது.

Next Story