தூத்துக்குடியில் ரூ.2¼ கோடி செலவில் புதிய தாலுகா அலுவலகம் அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்
தூத்துக்குடியில் ரூ.2¼ கோடி செலவில் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் ரூ.2¼ கோடி செலவில் தாலுகா அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தாலுகா அலுவலகம்தூத்துக்குடி தாலுகா அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக டூவிபுரத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு ரூ.2 கோடியே 39 லட்சத்து 29 ஆயிரம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இலவச லேப்டாப்முன்னதாக தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 294 மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கலெக்டர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ–மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பை வழங்கி பேசினார். அப்போது, தமிழக அரசு மாணவ–மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இதனை நன்கு பயன்படுத்தி வாழ்க்கை தரத்தையும், உலக அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். தற்போது பொதுமக்களை அச்சுறுத்தி வரும் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் நமது மாவட்டத்தில் டெங்கு முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. பொது மக்கள் யாரும் டெங்கு காய்ச்சல் குறித்து பயப்பட வேண்டாம். மாணவ, மாணவியர்கள் தங்களது வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள பகுதிகளில் நல்ல நீர் தேங்குவதை தடுக்க வேண்டும். நமது மாவட்டத்தில் காய்ச்சல் ஏற்பட்டால் அதனை சோதனை செய்வதற்காக 24 ரத்த தட்டணுக்கள் எண்ணும் கருவிகள் வரவழைக்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிகளில் பயன்பாட்டில் உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தங்களது இல்லங்களிலும், பொது மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சிகளில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.